தற்போதைய செய்திகள்

காரிமங்கலத்தில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனை – அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்

தருமபுரி

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனையை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது :-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011ம் ஆண்டு கிராமப் புறங்களில் உள்ள ஏழை எளிய வறுமைக்கோட்டிக்கு கீழ் உள்ள நபர்களுக்கு விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடு வழங்கும் திட்டத்தை அறிவித்து வெகு சிறப்பாக செயல்படுத்தினார்.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 39 ஊராட்சிகளில் உள்ள 1950 பயனாளிகளுக்கு ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் கறவைப்பசுக்கள் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட கறவைப்பசுக்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 12,000 லிட்டர் கூடுதல் பால் உற்பத்தியாகிறது. நடப்பு நிதியாண்டில் விலையில்லா கறவைப்பசுக்கள் 8 ஊராட்சிகளில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் 400 பெண் பயனாளிகளுக்கு 400 கறவைப்பசுக்கள் வழங்கப்பட உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் விலையில்லா வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வழங்கும் திட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 36,659 பயனாளிகளுக்கு ரூ.47 கோடியே 34 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஒரு பயனாளிக்கு 4 ஆடுகள் வீதம் 1,46,636 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட ஆடுகள் மூலம் 2,66,580 குட்டிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் ரூ.3.97 கோடி மதிப்பில் 1010 பயனாளிகளுக்கு 25 சதவிகிதம் மானியத்தில் கோழி பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது. 2012-13ஆம் ஆண்டில் கறிக்கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 16 பயனாளிக்கு 25 சதவிகிதம் மானியத்தில் ரூ.33 லட்சம் மதிப்பில் பண்ணைகள் அமைக்கப் பட்டுள்ளது. 2016-17ம் ஆண்டில் சிறிய அளவிலான நாட்டுக் கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் 120 பயனாளிகளுக்கு 25 சதவிகிதம் மானியத்தில் ரூ.29.10 லட்சம் மதிப்பில் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் புறக்கடைக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் 2018-19 ம் ஆண்டு 1600 பயனாளிகளுக்கு ரூ.1.03 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 4600 பெண் பயனாளிகளுக்கும் தலா நான்கு வார வயதுடைய 25 விலையில்லா அசில்இன நாட்டு கோழிகள் ரூ.94.30 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 8 ஆண்டுகளில் 27 கால்நடை கிளை நிலையங்கள் துவங்கப்பட்டு கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் ஒரு கால்நடை பெரு மருத்துவமனை, கால்நடை மருத்துவமனைகள் 2, கால்நடை மருந்தகங்கள் 79, நடமாடும் கால்நடை மருந்தகங்கள் 2, கால்நடை கிளை நிலையங்கள் 11, கால்நடை நோய் புலனாய்வு பிரிவு 1, நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி 1 ஆகிய கால்நடை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

காரிமங்கலம் கால்நடை மருத்துவமனை மூலம் அருகில் கிராமங்களில் உள்ள பொது மக்கள் வளர்க்கும் கால்நடைகளான பசுக்கள், எருமைகள், வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும், கோழிகளும் பயன் பெறுகின்றன. இதனால் கிராமபுறங்களில் உள்ள மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது. மக்கள் தேவைகள் என்ன என்பதை தமிழக அரசு அறிந்து அவற்றை பூர்த்தி செய்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைவாக செய்து வருகிறது. எனவே, இந்த அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இவ்விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ராஜேந்திரன், உதவி இயக்குநர் மரு.மணிமாறன், தருமபுரி கூட்டுறவு ஒன்றிய துணை தலைவர் பொன்னுவேல், ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவப்பிரகாசம், ஒன்றியக்குழு துணை தலைவர் செல்வராஜ், வட்டாட்சியர் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணி மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.