தற்போதைய செய்திகள்

முடிதிருத்தும் தொழிலாளி மீது திமுக பிரமுகர் கொலைவெறி தாக்குதல் – பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

திருப்பூர்

பல்லடம் அருகே முடி திருத்தும் தொழிலாளியை கொலைவெறித்தனமாக தாக்கிய தி.மு.க. பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட கணபதிபாளையம் ஊராட்சி தலைவராக இருப்பவர் நாகேஸ்வரி. இவரது கணவர் சோமசுந்தரம். இவர் மாவட்ட திமுக துணை செயலாளராக உள்ளார். மலையம்பாளையத்தை சேர்ந்தவர் சிதம்பரம்(54), முடி திருத்தும் தொழிலாளியான இவர் கணபதிபாளையத்தில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவருக்கு இருமகன்கள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக சலூன் கடை திறக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக சிதம்பரம் தனது சலூன் கடையை திறந்துள்ளார். அப்போது கடையை மறைத்து திமுக சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றும்படி திமுகவினரிடம் கேட்டுள்ளார்.

இதனிடையே மாவட்ட திமுக துணை செயலாளர் சோமசுந்தரம், சிதம்பரத்தை போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி மலையம்பாளையத்தில் உள்ள சோமசுந்தரத்தின் வீட்டிற்கு சென்ற சிதம்பரம் சென்றுள்ளார். அங்கு சிதம்பரத்தை, சோமசுந்தரம் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த சிதம்பரம் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் சிதம்பரத்தை தரதரவென இழுத்து வந்து வீட்டுக்கு வெளியே தள்ளியுள்ளனர்.

இதையறிந்ததும் சிதம்பரத்தின் மகன் மகாலிங்கம் விரைந்து சென்று ரத்தகாயத்துடன் கிடந்த சிதம்பரத்தை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அளிக்கப்பட்ட முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிதம்பரம் அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சோமசுந்தரம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முடிதிருத்தும் தொழிலாளியை கண்மூடித்தனமாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் தாக்கி படுகாயமடைய செய்த மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சோமசுந்தரத்தின் அடாவடி செயலுக்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

மேலும் முடிதிருத்தும் தொழிலாளியை கொலைவெறியுடன் தாக்கிய சோமசுந்தரத்தை கைது செய்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.