சிறப்பு செய்திகள்

ஒன்றிணைவோம் வா திட்டத்தின் பல மனுக்கள் போலியானவை – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி

சென்னை

தலைமை செயலகத்தில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பல மனுக்கள் போலியானவை என்றும்,திமுகவின் இதுபோன்ற மலிவான அரசியல் மக்களிடம் எடுபடாது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கடந்த 13.05.2020 அன்று டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க மக்களவை உறுப்பினர்கள் 4பேர் தலைமைச் செயலாளரை சந்தித்து, திமுக தலைவரின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பல லட்சம் மனுக்கள் பெறப்பட்டதாகவும், அதில் 15 லட்சம் பேருக்கு உணவு, உடை உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றி விட்டதாகவும், மீதமுள்ள ஒரு லட்சம் மனுக்களை எங்களால் செய்ய முடியாதவை, அரசு மட்டுமே செய்யக்கூடிய கோரிக்கைகளான சிறு, குறு தொழில் நிறுவனங்களை திறக்க வேண்டும், போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுக்கள் மட்டுமே உள்ளன. இதனை உடனே செய்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள்.

தி.மு.க மக்களவை உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை 98,752. மேற்கண்ட மனுக்கள் அனைத்தையும் தலைமைச் செயலாளர், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு விசாரணைக்கு அனுப்பி வைத்து விட்டார். மேற்கண்ட மனுக்களை ஆய்வு செய்தபோது 98,752 மனுக்களில் ஒரு மனு கூட இவர்கள் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளான, எம்எஸ்எம்இ மற்றும் போக்குவரத்து வசதி உள்ளிட்ட ஒரு கோரிக்கை கூட இடம்பெறவில்லை, அனைத்து மனுக்களிலும் ட்ரை ரேஷன் என்ற உணவுப் பொருள் சம்மந்தப்பட்டதாக இருந்து உள்ளது. எனவே, அந்த மனுக்களை அனைத்தையும் சம்மந்தப்பட்ட துறையான உணவு மற்றும் கூட்டுறவு துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் பேரில் மனுவில் குறிப்பிட்ட முகவரியில் வசிப்பவர்களிடம் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் விசாரணை நடத்தியதில், அரசால் வழங்கப்பட்ட ரொக்க உதவித்தொகை, விலையில்லா அரிசி, கூடுதல் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகிய அனைத்தையும் தாங்கள் பெற்றுக்கொண்டு விட்டதாகத்தான் தெரிவித்துள்ளார்கள். மேலும், சிலர் தங்களுக்கு தி.மு.க உதவிகள் செய்து கொடுப்பதாகக் கூறி மனுக்களில் கையொப்பம் பெற்றும், அலைபேசி மூலம் தகவல் பதிவு செய்ய சொல்லி கேட்டுக் கொண்டதால், இதைபோல் நாங்கள் மனுக்கள் அளித்ததாகவும், ஆனால் இதுவரை தி.மு.க ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் எங்களுக்கு எந்த உதவியும் செய்யாமல், எங்களுக்கு உதவி செய்து கொண்டு இருக்கக்கூடிய அரசிடமே மனுக்களை அளித்துள்ளார்கள் என்பதை தெரிவித்துள்ளார்கள்.

மேற்கண்ட வகைகளில் எல்லாம் மக்களின் உணவுத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த உண்மையை திசை திருப்பும் வகையில் டி.ஆர். பாலு தலைமையிலான எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவினர், மக்களிடம் அம்மாவின் அரசு பெற்றுள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையிலும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடும் தவறான செய்திகளை மக்களிடையே பரப்ப முயற்சிக்கிறார்கள் என்பது ஊர்ஜிதமாகிறது.

எனவே, கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின், அம்மா அவர்களின் நல்லாசியோடு முதலமைச்சரின் உறுதியான தொடர் நடவடிக்கைகளின் மூலமாக, மக்களுடைய அன்றாட தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க.வின் இதுபோன்ற மலிவான அரசியல் மக்களிடம் எடுபடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.