சிறப்பு செய்திகள்

ரூ.230 கோடியில் நொய்யல் ஆறு புனரமைப்பு பணி – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாக செல்லும் நொய்யல் ஆற்று அமைப்பில் சரகம் 0.0 கி.மீ முதல் 158.35 கி.மீ வரை விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு காணொலிக்காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கிடைக்கப்பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்கிடவும், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, நீர்வள ஆதாரத்துறை மூலமாக பல்வேறு பாசன மேம்பாட்டுத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாக செல்லும் நொய்யல் ஆற்று அமைப்பில் சரகம் 0.0 கி.மீ முதல் 158.35 கி.மீ வரை உள்ள அணைக்கட்டுகள், குளங்கள், ஆறு மற்றும் கால்வாய்களை விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்,230 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக நேற்று அடிக்கல் நாட்டினார்.

இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம், நொய்யல் ஆறு சீரமைவதுடன் 18 அணைக்கட்டுகள், 22 முறைசார்ந்த குளங்கள், சிதிலமடைந்த அணைக்கட்டு பகுதிகள், வாய்க்கால்கள், மணல் போக்கியின் மதகுகள், விவசாய நிலங்களுக்கு பிரிந்து செல்லும் வழங்கு வாய்க்காலின் மதகுகளை செப்பனிடுதல், நீர்வரத்து ஓடைகளை புதுப்பித்தல், ஓடைகளில் உரிய தடுப்பணைகளை ஏற்படுத்துதல், குளங்களின் கரைகளை பலப்படுத்துதல், தூர்வாருதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப் பட்டு சுமார் 7,000 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், 11,000 ஏக்கர் விவசாய நிலங்கள் மறைமுகமாகவும் பயனடையும்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், நீர்வள ஆதாரத்துறை முதன்மை தலைமைப்பொறியாளர் மற்றும் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் (பொது) கு.இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.