சிறப்பு செய்திகள்

ரூ.299 கோடியே ரூ.28 லட்சம் மதிப்பில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ.299 கோடியே 28 லட்சம் மதிப்பிலான குடியிருப்புகள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், அஞ்சுகிராமத்தில் புதிய பறக்கின்கால் காலனி அடுக்குமாடி குடியிருப்பு திட்டப் பகுதியில் 36 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 480 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் தஞ்சாவூர், அரியலூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் 46 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 560 அடுக்குமாடி குடியிருப்புகளையும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் சென்னை, ஈரோடு மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் 216 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1232 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 1314 மனை மேம்பாட்டுத் திட்டத்தையும் திறந்து வைத்தார்.

மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் முக்கியமான ஒன்றாக விளங்கும் உறைவிடத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழகத்தின் நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் இன்றி வாழும் நலிவுற்ற ஏழை எளிய மக்களின் வாழ்வாதார நிலையினை மேம்படுத்த தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் பல்வேறு குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், அஞ்சுகிராமத்தில் புதிய பறக்கின்கால் காலனி அடுக்குமாடி குடியிருப்பு திட்டப் பகுதியில் 36 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 480 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மகாராஜ சமுத்திரம் திட்டப் பகுதியில் 20 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 240 அடுக்குமாடி குடியிருப்புகள், அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், குரும்பன்சாவடி திட்டப் பகுதியில் 23 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 288 அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை மாவட்டம், திருவொற்றியூர், சலவைத்துறை பகுதி-11 திட்டப் பகுதியில் 3 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 32 அடுக்குமாடி குடியிருப்புகள்,

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் சென்னை மாவட்டம், புரசைவாக்கம், பராக்கா சாலையில் 74 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 160 வாரிய பணியாளர்களுக்கான வாடகை அடுக்குமாடி குடியிருப்புகள், ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், பெரியார் நகர், புதுமை காலனி மற்றும் கருங்கல்பாளையம் ஆகிய இடங்களில் 106 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1072 குடிசை மாற்று திட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், நாவல்பட்டு திட்டப் பகுதியில் 35 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து கட்டமைப்புகளுடன் கூடிய 1314 மனைகளுக்கான மனை மேம்பாட்டுத் திட்டம் என மொத்தம் 299 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்புகள் மற்றும் மனை மேம்பாட்டுத் திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதுடெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பி.கே.வைரமுத்து, தலைமைச் செயலாளர் க.சண்முகம், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) முனைவர் தா.கார்த்திகேயன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் பி.முருகேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.