தற்போதைய செய்திகள்

கரூர் ஒன்றியத்தில் ரூ.2.99 கோடியில் புதிய திட்டப்பணிகள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

கரூர்

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெறவுள்ள ரூ.2 கோடியே 99 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்தூர் பூலாம்பாளையம், காதப்பாறை, மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி, நெரூர் வடபாகம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூ. 2 கோடியே 99 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பிலான தார்ச்சாலை மேம்பாடு, நிழற்குடை அமைத்தல், ஊராட்சிமன்ற அலுவலகம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டப்பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் நேற்று துவக்கி வைத்து, மின்கலம் மூலம் இயக்கப்படும் குப்பை சேகரிக்கும் வாகனங்களை ஊராட்சிகளுக்கு வழங்கினார்.

கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சியில் நத்தமேடு காந்தி நகர் முதல் வடமலைக்கவுண்டனூர் வரை ரூ.25.16 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை மேம்பாடு செய்யும் பணிகளையும், பூலாம்பாளையம் ஊராட்சியில் ஆத்தூர் மூர்த்திபாளையம் முதல் பூலாம்பாளையம் வரை ரூ.21.29 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை மேம்பாடு செய்யும் பணிகளையும், காதப்பாறை ஊராட்சியில் ரூ.17.64 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகக்கட்டிடம் கட்டுவதற்கும், பசுபதிபாளையம் முதல் அருகம்பாளையம் வரை ரூ.60 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை மேம்பாடு செய்யும் பணிகளையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று துவக்கி வைத்தார்.

மேலும், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி; அரசு காலணியில் ரூ.8 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கவும், சீத்தக்காட்டானூர் சாலை முதல் செல்லிபாளையம் சாலை வரை ரூ.29.02 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை மேம்பாடு செய்யும் பணிகளையும், நெரூர் வடபாகம் ஊராட்சி சேனப்பட்டியில் நெரூர் தளவாபாளையம் முதல் சேனப்பாடி மற்றும் முனியப்பனூர் சாலை வரை ரூ.74 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை மேம்பாடு செய்யும் பணிகளையும் அமைச்சர் துவக்கி வைத்தார்.

கரூர் மாவட்டம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் குப்பைகளை சேகரம் செய்ய ஏதுவாக மின்கலம் பொருத்தப்பட்ட வாகனங்கள் வழங்க 147 ஊராட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கரூர், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி, கடம்பன்குறிச்சி, திருக்காடுதுறை, நஞ்சைபுகளுர், வாங்கல் குப்புச்சிப்பாளையம், வேட்டமங்கலம், மண்மங்கலம், நெரூர்வடக்கு, ஆத்தூர் பூலாம்பாளையம், சோமூர், நெரூர் தெற்கு மற்றும் நன்னியூர் ஆகிய 13 ஊராட்சிகளுக்கு தலா ரூ.2,91,460 வீதம் ரூ.64.12 லட்சம் மதிப்பிலான 22 மின்கலம் பொருத்தப்பட்ட குப்பை சேகரிக்கும் வாகனங்களை சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர்களிடம் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:-

அம்மா அவர்களின் நல்லாசியோடு, மக்களுக்கான ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் அடித்தட்டு ஏழை,எளிய மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்திடும் வகையில் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் முதலைமச்சர் உத்தரவின் அடிப்படையில், சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக அரசால் ஊரடங்கில் இருந்து வழங்கப்பட்டுள்ள தளர்வு விதிகள் கரூர் மாவட்டத்தில் முறையாக பின்பற்றப்படுகின்றது.

அந்த வகையில், தற்போது ஊரக வளர்சசி முகமையின் மூலம் பொதுமக்களின் நலன் கருதி கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ,235.11 லட்சம் மதிப்பிலான சாலைமேம்பாட்டுப் பணிகள் மற்றும் புதிய கட்டுமானப் பணிகள் நேற்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் தமிழக அரசு குறிப்பிட்டு வழிகாட்டுதல்களுடன் சமூக விலகலைப் பின்பற்றி நடத்தப்படும்.

மேலும், கிராம ஊராட்சிகளை தூய்iமாகவும், சுகாதாரமானதாகவும் பராமரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 13 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.64.12லட்சம் மதிப்பில் 22 குப்பை சேகரிக்கும் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் எஸ்.கவிதா, கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிக, கரூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பாலமுருகன், துணைத்தலைவர் ப.தங்கராஜ், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கமலக்கண்ணன், என்.எஸ்கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலெட்சுமி, பரமேஸ்வரன், சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.