தற்போதைய செய்திகள்

ஸ்டாலினை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு

மதுரை

இழந்த அரசியல் செல்வாக்கை புதுப்பிக்க ஸ்டாலின் கனவு காண்கிறார். மக்கள் ஒரு போதும் ஸ்டாலினை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்

மதுரை மாநகர் மாவட்டம் 52-வது வார்டில் ஆயிரம் ஏழை மக்களுக்கு வட்டக் கழக செயலாளர் அரியநாச்சி ராமலிங்கம் தலைமையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, சேமியா ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிவாரண பொருட்களை மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், பகுதி செயலாளர் செந்தில்குமார், பகுதி இளைஞரணி செயலாளர் உல்லாச கார்த்திக் மற்றும் முனிஸ்வரன், மீனாள், ஸ்ரீரங்கநாதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது;-

தற்போது ஊரடங்கு நீட்டிப்பை மருத்துவக்குழு, மத்திய அரசு ஆலோசனையை பெற்று முதலமைச்சர் செயல்படுத்துகிறார் முதலமைச்சருக்கு பொதுமக்கள் நல் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். கூட்டுறவு வங்கி மூலம் கடன் வழங்கும் சிறப்பு முகாம் முதலமைச்சர் ஆணைக்கிணங்க விரைவில் நடைபெறும்.

போதுமான அளவுக்கு தமிழகத்தில் உணவுப்பொருள் உள்ளது. மேலும் மூன்று மாதங்களாக பொதுமக்களுக்கு அரிசி , பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. எந்த மாநிலத்திலும் இதுபோன்று வழங்கியது கிடையாது. தமிழகத்தில் எங்குமே யாரும் ஒரு வேளை பட்டினி இல்லை என்ற சூழ்நிலையை இன்றைக்கு முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.

புதுசா புதுசா கருத்துக்களை வழங்குபவர் ஸ்டாலின். இதன் மூலம் தான் இழந்த அரசியல் செல்வாக்கை புதுப்பிக்கலாம் என்று ஸ்டாலின் கனவு காண்கிறார். அது ஒருபோதும் நடக்காது. ஏனென்றால் மக்கள் ஒரு போதும் ஸ்டாலினை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

உலக சுகாதார நிறுவனம் கொடுத்த அறிவுரையை தமிழக சுகாதாரத்துறை அமல்படுத்துவதால் கொரோனா பரிசோதனை செய்கிறோம். இந்தியாவிலேயே அதிகமான கொரோனா பரிசோதனையை தமிழகம் மட்டுமே மேற்கொண்டு வருகிறது.
ஸ்டாலின் தேவையில்லாமல் குறை கூறுகிறார்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.