தற்போதைய செய்திகள்

மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த 9,095 பேருக்கு ரூ.5.25 கோடி சிறப்பு கடனுதவி – அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் வழங்கினர்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 721 மகளிர் சுயஉதவிக் குழுவைச் சார்ந்த 9,095 உறுப்பினர்களுக்கு ரூ.5.25 கோடி மதிப்பில் சிறப்பு கடனுதவிக்கான காசோலைகளை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் வழங்கினர்.

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஆணைக்கிணங்க, ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதை தொடர்ந்து, அனைத்து சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

அதனடிப்படையில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் மாநகர் மாவட்டக் கழக செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ, சட்டமன்ற அவைக்குழு தலைவர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ, வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ , கே.ஆர்.ராஜா கிருஷ்ணன் எம்.எல்.ஏ, எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலையில் ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி, பவானி, கோபிசெட்டிபாளையம், ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, அம்மாபேட்டை, அந்தியூர், சத்தியமங்கலம், மற்றும் புஞ்சை புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 721 மகளிர் சுய உதவிக் குழுவைச் சார்ந்த 9,095 உறுப்பினர்களுக்கு ரூ.5.25 கோடி மதிப்பில் சிறப்பு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினர்.

மேலும் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் நகராட்சி மீனாட்சி திருமண மண்டபம் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கே.ஜி. திருமண மண்டபம் ஆகியவற்றில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர்.சு.ஈஸ்வரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியைச் சார்ந்த 135 மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள 1,877 மகளிருக்கு ரூ.93.85 லட்சம் மதிப்பில் சிறப்பு கடனுதவியும், 9 மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள 114 மகளிருக்கு ரூ.60.45 லட்சம் மதிப்பில் நேரடி கடனுதவியும் என மொத்தம் 144 மகளிர் சுய உதவிக்குழுவைச் சார்ந்த 1,991 உறுப்பினர்களுக்கு ரூ.1.54 கோடி மதிப்பில் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினர்.

அதைத்தொடர்ந்து, கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி பள்ளி, மகாத்மா பருத்தி நெசவாளர் கூட்டுறவு சங்கம், சதுமுகை ஊராட்சி சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் திருமண மண்டபம், சத்தியமங்கலம் கொமராபாளையம் கொங்கு மண்டபம், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி ஆகிய பகுதிகளில் நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் என சுமார் 3500 நபர்களுக்கு உணவு வழங்கினர். அதைத்தொடர்ந்து, சதுமுகை ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் இணைப்பு, சத்தியமங்கலம் மற்றும் விளாமுண்டி வனச்சரக அலுவலகத்திற்கு தலா ரூ.18 லட்சம் வீதம் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய கட்டிடம் திறந்து வைத்தனர்.

மேலும் சத்தியமங்கலம் மீனாட்சி திருமண மண்டபத்தில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 20 மகளிருக்கும், புஞ்சைபுளியம்பட்டி கே.ஜி. திருமண மண்டபத்தில் 41 மகளிருக்கும் என 61 மகளிருக்கு ரூ.15.25 லட்சம் மதிப்பில் அம்மா இருசக்கர வாகனங்களையும் வழங்கினார்கள். தொடர்ந்து, பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 11 ஊராட்சிகளுக்கு பேட்டரியால் இயங்கும் ரூ.52.18 லட்சம் மதிப்பிலான 21 குப்பை அள்ளும் வண்டிகளையும் அமைச்சர்கள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம். ஒன்றியக் கழக செயலாளர்கள் வி.சி.வரதராஜ், சி.என். மாரப்பன், வி.ஏ.பழனிசாமி, ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சரோஜா பழனிச்சாமி, எஸ்.கே.பழனிச்சாமி, புளியம்பட்டி நகர செயலாளர் ஜி.கே.மூர்த்தி, சிவராஜ், சரவணன், அம்மு பூபதி, அம்மு ஈஸ்வரன், பவானிசாகர் பேரூராட்சி செயலாளர் வாத்தியார் துரைசாமி, பவானிசாகர் செல்வம், கொமாரபாளையம் இளங்கோ, புளியம்பட்டி பாபு கூட்டுறவு ஒன்றிய தலைவர் புதூர்கலைமணி, வழக்கறிஞர் முத்துசாமி, என்.ஏ.தேவராஜ், மேலாண்மை இயக்குனர் எஸ்.சுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன், மாவட்ட முதன்மை வருவாய் அலுவலர் அழகிரி, கோபி சரக துணைப்பதிவாளர் கந்தராஜா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.