தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் யாருக்கும் உணவுப்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை – அமைச்சர் ஆர்.காமராஜ் திட்டவட்டம்

சென்னை

மக்களின் பசிப்பிணியை போக்க உணவு வழங்கப்பட்டு வருவதால் தமிழகத்தில் யாருக்கும் உணவுப்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரொக்க உதவித்தொகையாக தலா ரூ. 1000- வீதம் வழங்க, முதலமைச்சரால் உத்தரவிடப்பட்டு, இதற்காக ரூ. 2014.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 98.85 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ரொக்க உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் முடிய ஏஏஒய் மற்றும் முன்னுரிமை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் விலையில்லாமல் அரிசி வழங்குவதற்கு மத்திய அரசால் ஆணையிடப்பட்டது. எனினும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கூடுதல் அரிசி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னுரிமை அல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் முதல் ஜூன் முடிய 3 மாதங்களுக்கு நபர் ஒன்றுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்குவதற்காக முதலமைச்சரால் உத்தரவிடப்பட்டு 438.00 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3 நபர்களுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது அவர்கள் பெற்று வரும் அரிசி இரு மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் முடிய அனைத்து 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை 655.63 கோடி ரூபாய் செலவில் வழங்குவதற்கு முதலமைச்சரால் உத்தரவிடப்பட்டு விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று அனைத்து குடும்பங்களுக்கும் விலையில்லாமல் ரேஷன் பொருள் வழங்கியது இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான்.

மேற்கண்டவாறு ஏப்ரல் மாதத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவித்தொகையாக ரூ. 1000 வீதம் வழங்குவதற்கும், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் முடிய அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கூடுதல் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை வழங்குவதற்கும் வழக்கமாக வழங்கப்படும் உணவு மானியத்தைக் காட்டிலும் கூடுதலாக 3,108.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட விலையில்லா பொருட்கள் ஏப்ரல் மாதத்தில் 96.30 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே மாதத்தில் நாளது தேதி வரை 90.77 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் வசிக்கும் 845 கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள 2,92,912 குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் நியாய விலைக் கடைப் பணியாளர்களைக் கொண்டு நேரடியாக சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த அக்டோபர் 2019 முதல் ஏப்ரல் 2020 முடிய உள்ள காலத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்தவர்களில் அங்கீகரிக்கப்பட்டு ஆனால் இதுவரை குடும்ப அட்டை அச்சிட்டு வழங்கப்பெறாமல் உள்ள 71,067 குடும்பங்களுக்கும் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ள ஆணையிட்டுள்ளது. இப்படி நாங்கள் குடும்பம் குடும்பமாக ஏழைகளை தேடி பொருள் வழங்குகிறோம்.

மேலும், கட்டுமான தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த பிற மாநில தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் அமைப்பு சாரா ஆட்டோ தொழிலாளர்கள் என 22,76,936 தொழிலாளர்களுக்கு தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பும் மற்றும் குடும்ப அட்டை இல்லாத 4,022 திருநங்கைகளுக்கு 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பும் வழங்க முதலமைச்சரால் உத்தரவிடப்பட்டு மொத்தம் 144 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டுள்ளது. இப்படி வழங்கிய மாநிலம் இந்தியாவில் தமிழ்நாடு மட்டும்தான்.

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தைச் சேர்ந்த 25,98,000 உறுப்பினர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 1,000 ரூபாய் வீதம் 2 மாதங்களுக்கு ரொக்க உதவித் தொகை வழங்க முதலமைச்சரால் உத்தரவிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அம்மா உணவகங்கள் மூலமும், சமுதாய உணவுக் கூடங்கள் மூலமும், ஏழை எளிய மக்களின் பசிப்பிணியை போக்கும் வகையில் உணவு வழங்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் எந்தவொரு நபருக்கும் உணவுப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.