சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

ரூ.70.23 கோடியில் புதிய பாலம் பணிகள் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வன்னியம்பட்டி – மணியம்பலம் சாலையில், வன்னியம்பட்டியில் வெள்ளாற்றின் குறுக்கே 6 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், திருநெல்வேலி, திருவண்ணாமலை, தருமபுரி, திருவாரூர், கரூர், ஈரோடு, திருப்பூர், மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 29 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 பாலங்கள் மற்றும் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்து, விழுப்புரம் மற்றும் சேலம் மாவட்டங்களில் 70 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒரு ஆற்றுப்பாலம் மற்றும் ரயில்வே கடவிற்கு மாற்றாக கட்டப்படவுள்ள 3 சாலை மேம்பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்தும், பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதிசெய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வன்னியம்பட்டி – மணியம்பலம் சாலையில், வன்னியம்பட்டியில் வெள்ளாற்றின் குறுக்கே 6 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.

மேலும், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், அம்பாசமுத்திரம் – பாபநாசம் – மேலணைச் சாலையில், முண்டந்துறையில் சேர்வலாற்றின் குறுக்கே 9 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பாண்டி-கிருஷ்ணகிரி சாலையில், செங்கத்தில் முறையாற்றின் குறுக்கே 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி ஆர்.எஸ்.தொப்பையார் அணை சாலையில், பொம்மிடியில் 2 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மன்னார்குடி – ஒரத்தநாடு – திருவோணம் சாலையில், தெற்கு நத்தத்தில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மன்னார்குடி – ஒரத்தநாடு – திருவோணம் சாலையில், ஓவேல்குடியில் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் ஆதனூர் – மண்டபம் – வடுவூர் சாலையில், அய்யம்பேட்டையில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், பாலவிடுதி – கடவூர் – அய்யலூர் சாலையில், சேவாப்பூரில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், வைரமடை – தொப்பம்பட்டி – குப்பம் சாலையில், தொப்பம்பட்டியில் 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் பாலவிடுதி – கடவூர் – அய்யலூர் சாலையில், கடவூரில் 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், அந்தியூர் – அம்மாப்பேட்டை சாலையில், பூதப்பாடியில் 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் கொளநல்லி ஆர்.எஸ் – வீரசங்கிலி சாலையில், திட்டப்பாறையில் 1 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், தண்ணீர்பந்தல் – கம்பிளியாம்பட்டி- லக்கமநாயக்கன்பட்டி சாலையில், தேவனம்பாளையத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், தவசிபுதூர் – வடுகபட்டி சாலையில், தவசிபுதூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 35 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 பாலங்களை முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.

மேலும், திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நெடுஞ்சாலைத்துறை பயணியர் விடுதி வளாகத்தில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்ட அலுவலகக் கட்டடம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டடத்தையும் முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம், விழுப்புரம் – காவணிப்பாக்கம் சாலையில், காவணிப்பாக்கத்தில் மலட்டாற்றின் குறுக்கே 16 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், சூரமங்கலம்-ஓமலூர் சாலையில், ரயில்வே கடவு எண்.7க்கு மாற்றாக மேக்னசைட் மற்றும் ஓமலூர் ரயில்வே நிலையங்களுக்கு இடையில் பெரமச்சூரில் 15 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், தொளசம்பட்டி- மேச்சேரி சாலையில் ரயில்வே கடவு எண்.15க்கு மாற்றாக,

ஓமலூர் மற்றும் மேச்சேரி ரயில்வே நிலையங்களுக்கு இடையில் தொளசம்பட்டியில் 18 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மேட்டூர் வட்டம், சங்ககிரி-மேச்சேரி சாலையில் ரயில்வே கடவு எண்.18க்கு மாற்றாக ஓமலூர் மற்றும் மேச்சேரி ரயில்வே நிலையங்களுக்கு இடையில் குட்டப்பட்டியில் 19 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 70 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒரு ஆற்றுப்பாலம் மற்றும் ரயில்வே கடவிற்கு மாற்றாக கட்டப்படவுள்ள 3 சாலை மேம்பாலப் பணிகளுக்கு முதலமைச்சர் நேற்று அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச்செயலாளர் க.சண்முகம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) என்.சாந்தி, தலைமைப் பொறியாளர் (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்) எம்.கே.செல்வன், தலைமைப் பொறியாளர் (திட்டங்கள்) மா.முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.