மதுரை

திமுக எம்.எல்.ஏக்கள் தொகுதி மக்களை சந்திக்கவில்லை – வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

மதுரை

தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தொகுதி மக்களை சந்திக்கவில்லை என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தில் உள்ள அவனியாபுரம் பகுதியில் 60-வது வார்டில் வட்ட கழக செயலாளர் முருகேசன் தலைமையில் 300 பேருக்கும், 62-வது வார்டில் வட்டக் கழக செயலாளர் கருத்தமுத்து தலைமையில் 300 பேருக்கும், 59-வது வார்டில் வட்டக் கழக செயலாளர் கருணா தலைமையில் 400 பேருக்கும் கொரோனா நிவாரணமாக அரிசி மற்றும் காய்கறி வழங்கப்பட்டது.
இதில் 1000 பேருக்கு நிவாரணப்பொருளை மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், முன்னாள் தொகுதிக் கழக இணைச் செயலாளர் வக்கீல் கல்யாணசுந்தரம், திருப்பரங்குன்றம் பகுதி கழக செயலாளர் பன்னீர்செல்வம், அவனியாபுரம் பகுதி கழக அவைத்தலைவர் காசிராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

பின் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கூறியதாவது:-

தற்போது இந்த திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை கிழக்குத்தொகுதி ஆகியவை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி ஆகும். ஆனால் இதுவரை மக்களை அவர்கள் சந்திக்கவில்லை. ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஆணைக்கிணங்க இந்த இரண்டு தொகுதிகளிலும் ஏறத்தாழ இதுவரை 50,000 குடும்பங்களுக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நிவாரண தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது இதன் மூலம் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலம் மக்களை ஸ்டாலின் ஏமாற்றியுள்ளார்.

கொரோனா உண்மை நிலவரத்தை அரசு மறைக்கிறது என்றால் அதனை கண்டுபிடித்து ஆதாரத்தை ஸ்டாலின் கூறட்டும்.
ஸ்டாலின் கூறுவது பொய்யான கருத்து என்பதை தற்போது அமைச்சர் ஆர்.காமராஜர் உறுதிப்படுத்தியுள்ளார்.
98 ஆயிரம் மனுக்களும் உணவுகள் வேண்டும் என முதல்வருக்கு கொடுக்கப்பட்ட மனுக்களே தவிர வேறு எந்த மனுக்களும் இல்லை என்பதை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். ஸ்டாலின் கூறும் கருத்து முற்றிலும் புறம்பானது.

தமிழ்நாட்டில் தினந்தோறும் 11 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அறிகுறி இருக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.
அறிகுறி உள்ள பொதுமக்கள் யாரும் எங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவில்லை என குற்றம் சாட்டவில்லை.
திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலினுக்கு பரிசோதனை செய்யவில்லை என்று நினைக்கிறேன் உடனடியாக இந்த அரசு ஸ்டாலினுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.