சிறப்பு செய்திகள்

குறுவை, சம்பா சாகுபடிக்கு தண்ணீரை உடனே வழங்க வேண்டும் – காவிரி நீர் முறைப்படுத்தும் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

சென்னை

குறுவை, சம்பா சாகுபடிக்கு தண்ணீரை உடனே வழங்க வேண்டும் என்று காவிரி நீர் முறைப்படுத்தும் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 30-வது கூட்டம் காணொலிக் காட்சி மூலம் குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்குழுவின் அனைத்து மாநில உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் நீர்வள ஆதாரத்துறை தலைமைப்பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, காவிரி தொழில் நுட்பக்குழு தலைவர் ஆர்.சுப்ரமணியன், துணைத் தலைவர் பட்டாபிராமன், திருச்சி உதவி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி பேசினார். அப்போது அவர் தமிழக அணைகளில் தற்போது நீர்வரத்து, நீர் விநியோகம், நீர் இருப்பு போன்ற விபரங்களையும், புதுச்சேரி மாநிலத்திற்கு வழங்கப்பட்ட நீர் அளவு போன்றவற்றையும் தெரிவித்தார். அதேபோல கர்நாடகம், கேரளம், பாண்டிச்சேரி மாநிலங்களின் உறுப்பினர்களும் பல புள்ளி விபரங்களை தெரிவித்தனர்.

மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தற்சமயம் மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கு தர வேண்டிய நீரை உடனே வழங்கிட வேண்டும். தமிழகத்திற்கு ஜூன் மாதம் 9 டிஎம்சியும், ஜூலை மாதத்திற்கு 32 டிஎம்சியும் தண்ணீர் தரவேண்டும். இதுநாள் வரையில் 9 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது. குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு நீர் தேவைப்படுவதால் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டிற்கு மொத்தம் 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி குறிப்பிட்டார்.

இதை போலவே கர்நாடகம், கேரளம், பாண்டிச்சேரி மாநிலங்களின் அலுவலர்களும் தங்கள் மாநிலத்திற்கு தேவைப்படும் தண்ணீர் அளவு குறித்து புள்ளி விபரங்களை உரிய படிவத்தில் வழங்கி விளக்கம் அளித்தனர். இவை அனைத்தையும் ஒழுங்காற்று குழு தலைவர் கவனமுடன் கேட்டறிந்தார்.

இக்குழு கூட்டத்தின் அறிக்கை காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் பார்வைக்கு உடனே சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மத்திய நதிநீர் ஆணையத்தின் தலைமை பொறியாளர் (கோவை) என்.எம்.கிருஷ்ணன் உன்னி, மத்திய தோட்டக்கலைத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீனிவாசன் மற்றும், கர்நாடகம், கேரளா சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.