தற்போதைய செய்திகள்

அதிகாரிகளின் பணியை தடுக்கும் வகையில் நாமக்கல் எம்.பி. தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் – அமைச்சர் பி.தங்கமணி குற்றச்சாட்டு

நாமக்கல்

அதிகாரிகளின் பணியை தடுக்கும் வகையில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் பி.தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. குமாரபாளையம் திருவள்ளுவர் நகரில் ரூ. 12.70 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலை கட்டடம் கட்டுவதற்கு கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி அடிக்கல் நாட்டி ரூ.1.90 லட்சம் மதிப்பில் குடிநீர்த் திட்டத்திற்கான பணிகளையும் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட 11 இடங்களில் ஒரு கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தார் சாலை அமைக்கும் பணிகளையும் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

2019-2020ஆம் ஆண்டு மத்திய நிதிக்குழுத் திட்டத்தின்கீழ், பள்ளிபாளையம் தில்லைநகர், காமாட்சி அம்மன் கோவில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நேரு நகர் உள்ளிட்ட 11 இடங்களில் இந்தப் புதிய தார் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இப்பணிகளின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 24 லட்சம் ஆகும்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் பள்ளிபாளையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

தமிழகத்தில் எதிர்கால மின்தேவையை கருத்தில் கொண்டு அம்மா அவர்கள் 6 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கான புதிய அனல் மின்நிலைய திட்டங்களை அறிவித்ததையடுத்து, தற்போது அப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வட சென்னை அனல் மின் நிலையத்தை பொறுத்தவரை பணிகள் முடிந்து, இந்த ஜூன் மாதத்தில் திறப்பதாக இருந்தது. கொரோனா தாக்கம் காரணமாக மூன்று, நான்கு மாதங்கள் தாமதமாகி விட்டது. இந்த ஊரடங்கு முடிந்தபிறகு வருகின்ற டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் அது திறக்கப்படும். இதன்மூலம் 800 மெகாவாட் மின் உற்பத்தி கிடைக்கும். மற்ற அனல் மின் நிலையங்கள் அமைக்கும் திட்டப் பணிகள் 2023-2024-ஆம் ஆண்டில் முடிவடையும்.

நீர்மின் திட்டங்களை பொறுத்தவரை, கொல்லிமலை மற்றும் நீலகிரியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவிற்கு முன்பாக, தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 17 ஆயிரம் மெகாவாட் மின்தேவை இருந்தது. இந்த ஆண்டு ஊரடங்கு காரணத்தினால் 4 ஆயிரம் மெகாவாட் குறைந்து, 13 ஆயிரம் மெகாவாட் அளவே மின்தேவை உள்ளது. தற்போது ஊரடங்கு தளர்வையடுத்து தொழிற்சாலைகள் செயல்பட்டாலும், தற்போது 3 ஆயிரம் மெகாவாட் அதிகரித்து நாளொன்றுக்கு 14 ஆயிரம் மெகாவாட் தேவைப்படுகிறது.

முழுமையாக ஆலைகள் செயல்படும்போது 17 ஆயிரம் மெகாவாட் தேவை இருந்தாலும் அதனை மின் வாரியம் அளிக்கும். இருந்தபோதிலும், தற்போது மின்நுகர்வு குறைவாகவே உள்ளது. 3 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி அதிகமாகவே நம்மிடம் உள்ளது. கேங்மேன் தேர்வு முடிவுகளை மின் வாரியம் வெளியிட்டுள்ளது. பணி ஆணைகள் வழங்குவது குறித்து நீதிமன்ற உத்தரவு வெளியான பிறகு, இதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு முழுமையாக பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையைத் தவிர்த்து மற்ற இடங்களில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அரசியல் காரணத்திற்காகவே, நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், தமிழக அரசின்மீது அவதூறுகளைப் பரப்பி பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா காலத்தில் பொதுமக்களை சந்திக்காமல் இருந்துவிட்டு இன்று நாமக்கல் சட்டமன்ற உறுப்பினரை பற்றி சட்டத்திற்கு புறம்பாக, வீட்டிற்கு நீர் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதாக தவறான தகவலை பாராளுமன்ற உறுப்பினர் பரப்பி வருகிறார். சட்டமன்ற உறுப்பினர் எந்தவித தவறும் செய்யவில்லை என்று அவரே நேரடியாக செய்தியாளர்கள் மத்தியில் நிரூபித்துள்ளார். அதை எதிர்கொள்ள முடியாமல் தன்னை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் தாக்குவதாக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும்.

இத்தொகுதியில் அரசு திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர் ஆய்வு செய்யும்போது ஏதாவது தவறு இருந்தால் நேரடியாக அதிகாரிகளை சந்தித்து முறையிட வேண்டுமே தவிர, தன்னிச்சையாக சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு ஆய்வுகளில் ஈடுபடுவதும் அரசு அலுவலர்களை மிரட்டுவதும் தேவையில்லாத பிரச்சனையை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.

குறைகள் குறித்து அதிகாரிகளுடன் தான் முறையிட வேண்டும் இவர் நேரடியாக சென்று ஆய்வு செய்து பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது. அதிகாரிகள் வேலை செய்வதை தடுக்கும் வகையில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக இயக்கத்தை சேர்ந்தவர்களிடமே நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினரின் செயல்பாடு குறித்து ஸ்டாலின் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

பின்னர் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினரை ஆளுநர் அழைத்து கண்டிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பி.தங்கமணி, இந்த விவகாரத்தில், நாடாளுமன்ற உறுப்பினரைத்தான் தண்டிக்க வேண்டும். ஏனென்றால் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் எவ்வித தவறும் செய்யவில்லை என்று நிரூபித்து விட்டார். அதை விட்டுவிட்டு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம். இதுபோன்று நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி பதில் அளித்தார்.