தற்போதைய செய்திகள்

கொரோனாவை ஒழித்த முதன்மாநிலமாக தமிழகம் உருவாகும் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை

அம்மாவின் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் கொரோனா வைரஸ் நோயை ஒழித்த முதன் மாநிலமாக தமிழகம் உருவாகும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி பட கூறினார்

மதுரை பழங்காநத்தம் – ஜெய்ஹிந்த்புரம் – டி.வி.எஸ்.நகர் – ஆகிய பகுதிகளை இணைப்பதற்காக 2000ம் ஆண்டு 33 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு பணிகள் முடிவுறாத நிலையில் உள்ள பழங்காநத்தம் மேம்பாலத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு மேற்கொண்டார். இப்பாலம் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் துவங்க பட்ட திட்டமானாலும் சரி, எந்த கட்சி ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டமானாலும் சரி மக்கள் தேவையை பூர்த்தி செய்வது தான் இந்த அரசின் நோக்கம் ஆகும்.கடந்த. 2000ம் ஆண்டு துவங்கப்பட்ட இன்னும் நிறைவடையாமல் உள்ள மதுரை பழங்காநத்தம்-ஜெய்ஹிந்த்புரம்-திருப்பரங்குன்றம் – டி.வி.எஸ் நகர் மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாலங்களை கட்ட திட்டமிடுவதற்கு முன்பாகவே தனியார் இடத்தினை கையகப்படுத்திவிட்டு தான் திட்டங்களை தீட்ட வேண்டும். அப்போது பாலம் கட்டும் திட்டங்கள் திட்டமிட்டபடி நிறைவேறும்.

மதுரையில் தற்போது கட்டப்பட்டு வரும் பாலங்கள் அனைத்தும் நிலங்களை கையக படுத்தி தான் கட்டப்பட்டு வருகிறது. மதுரை காளவாசல் பகுதியில் ரூ.58 கோடியில் புதிய உயர்மட்ட மேம்பாலத்திற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் அடிக்கல் நாட்டினர் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

மேலும் குருவிக்காரன் சாலையில் தற்போது உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியும் , பிசி பெருங்காயம் கம்பெனி அருகே உள்ள சுற்றுச் சாலையில் உயர்மட்ட பாலமும் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்திற்கு மக்கள் பயன்பாட்டிற்காக அதிக அளவில் உயர்மட்ட பாலங்களை முதலமைச்சர் தந்துள்ளார்.

நியாய விலை கடைகளில் மதுரையில் நேற்று பெய்த கனமழையால் மக்களுக்கு உணவு பொருள்கள் வழங்குவதில் சிரமம் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை விரட்ட அரசாலும் சட்டத்தாலும் எதுவும் செய்ய முடியாது. மக்கள் நினைத்தால் மட்டுமே முடியும். அம்மாவின் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் இந்த நோயிலிருந்து முதன்முதலில் விடுபட்டு பட்ட மாநிலம் தமிழகம் என்ற நிலை உருவாகும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், கழக மாணவர் அணி இணைச்செயலாளர் பி.குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.