சிறப்பு செய்திகள்

தமிழகத்தில் கொரோனா நோய்ப்பரவலை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் – முதலமைச்சர் புள்ளிவிபரங்களுடன் பேச்சு

சென்னை

தமிழகத்தில் கொரோனா நோய்ப்பரவலைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மாவட்ட ஆட்சி தலைவர்களிடையே புள்ளிவிபரங்களுடன் பேசினார்.

அவர் பேசியதாவது:-

இன்றைக்கு தமிழகத்தைப் பொறுத்தவரை, நோய்ப்பரவலைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகிறோம். நம்முடைய அரசு எடுத்த நடவடிக்கைகள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றேன்.

மருந்து கொள்முதல் செய்வதற்காக உற்பத்தியாளர்களுடன் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தியது – 22.1.2020. மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு பணியாணை வழங்கப்பட்ட நாள் – 31.1.2020.மருந்துகள் வாங்குவதற்கு பணியாணை வழங்கப்பட்ட நாள் – 2020 பிப்ரவரி முதல் வாரம் – 146 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டது.

வெளிநாட்டிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் விமானம் மூலம் வருகை தந்தவர்களை பரிசோதனை செய்ய துவங்கப்பட்ட நாள் – 23.1.2020.தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்ட நாள் – 7.3.2020

திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், மதுரை மற்றும் பூந்தமல்லியில் தனிமைப்படுத்தும் வசதிகள் முதற்கட்டமாக துவங்கப்பட்ட நாள் – 15.3.2020 .பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்கவும், எல்லையோர மாவட்டங்களில் திரையரங்குகள், மால்கள் மூட உத்தரவிடப்பட்ட நாள் – 15.3.2020.மழலையர்கள் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டது – 15.3.2020

மாநில எல்லைகளில் பரிசோதனை – 16.3.2020.தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 23.3.2020 அன்று வெளியிடப்பட்டு, 24.3.2020 மாலை 6 மணி முதல் அமல்படுத்தப்பட்டது.அதன் பின்னர், மத்திய அரசு தன்னுடைய 24.3.2020 அன்றைய அறிவிப்பில் 25.3.2020 முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தது. அதை அரசு கடைப்பிடித்தது. 15.4.2020 அன்று முதல் 3.5.2020 வரையான நாட்களுக்கு இரண்டாவது ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

4.5.2020 முதல் 17.5.2020 வரை மூன்றாவது ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

18.5.2020 முதல் 31.5.2020 வரை நான்காவது ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டது.

எனது தலைமையில் நடத்தப்பட்ட மாநில பேரிடர் மேலாண்மை குழுக் கூட்டங்களின் எண்ணிக்கை – 14.
பாரதப் பிரதமருடன் 5 முறை கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெற்றது.மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் 6 ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன.12 ஒருங்கிணைப்புக் குழுவினருடன் மூன்று கூட்டங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன. தலைமைச் செயலாளர் தலைமையில் நடத்தப்பட்ட உயர்மட்ட குழு கூட்டம் 4 முறை.

மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் 6 முறை கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன.
தலைமைச் செயலாளரின் தலைமையில் அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது.மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பொது சுகாதாரத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் 3 முறை நடைபெற்று இருக்கின்றன.

இந்திய மருத்துவ முறை மருத்துவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒரு முறை நடைபெற்றது. மார்ச் மாத இறுதியில் 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள், 1500 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர்.13.4.2020 அன்று 334 சுகாதார ஆய்வாளர்கள், 2,715 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

1323 செவிலியர்கள், மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டனர்.மேலும், 8.5.2020-ல் 2570 செவிலியர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.31.3.2020 மற்றும் 30.4.2020 அன்று ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ தொழில் நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கு இரண்டு மாத காலம் ஒப்பந்தம் முறையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.

12 மண்டல அளவிலான சிறப்பு பணிக்குழுக்கள். இன்றைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் களப் பணிகளை ஒருங்கிணைக்கின்றனர். தமிழ்நாட்டில் சில தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது தொடர்பாகவும், நோய்த் தொற்று பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும், என்னுடைய தலைமையில் 23.4.2020 அன்று காணொலிக் காட்சி மூலமாக தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. 16.4.2020 அன்று ஊரடங்கு உத்தரவு தளர்வு குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.

சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகர்ப்புறங்களில் நோய்த்தொற்றை கண்காணிக்க இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், இந்திய காவல் பணி அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் அடங்கிய 15 குழுக்கள் 29.4.2020 அன்று அமைக்கப்பட்டது. 5.5.2020 அன்று சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் சென்னை மாநகரத்தில் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வு கூட்டம் என் தலைமையில் நடத்தப்பட்டது.

வெளிநாடுகள், மற்றும் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்துவர கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தலைமையில் குழுக்களும், பிரத்யேகமான வலைதளமும் உருவாக்கப்பட்டது.இதுவரை 2,47,561 வெளிமாநில தொழிலாளர்கள் 170 ரயில்கள் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து பயணச் செலவுகளும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டது.

2,218 வெளிநாடு வாழ் தமிழர்கள் விமானம் மற்றும் கப்பல் மூலமாகவும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். 4.5.2020 முதல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கும், பிற மாவட்டங்களுக்கும் தொழிற்சாலைகள், சேவை நிலையங்கள், தனிக்கடைகள், இதர அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட உரிய நெறிமுறைகளுடன் அனுமதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 11.5.2020 முதல் 34 விதமான கடைகளுக்கு செயல்பட உரிய நெறிமுறைகளுடன் அனுமதிக்கப்பட்டது.

11.5.2020 முதல் தமிழ் திரைப்பட,சின்னத்திரை தயாரிப்பு பின் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 10.5.2020 முதல் திருமழிசையில் மொத்த காய்கறி சந்தை தற்காலிகமாக செயல்பாட்டுக்கு வந்தது. 19.5.2020 முதல் சென்னை மாநகராட்சி காவல் எல்லை தவிர பிற பகுதிகளில் முடிதிருத்தும் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

24.5.2020 முதல் அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. 20.5.2020 – வாரியத்தில் பதிவு செய்யப்படாத தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் நெசவாளர்களுக்கும் 2000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்க உத்தரவு வழங்கப்பட்டது. 20.5.2020 – சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க புதிய குழுக்கள் அமைக்கப்பட்டது. 23.5.2020 முதல் சென்னை மாநகராட்சி காவல் எல்லை தவிர ஆட்டோ ரிக்ஷாக்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

25.5.2020 முதல் சென்னை பெருநகர எல்லைக்கு உட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட்ட 17 தொழிற்பேட்டைகள் 25 சதவிகித தொழிலாளர்களை கொண்டு செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டது. களப்பணியாளர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்கள், கையுறைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

களப்பணியாளர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால் அரசே சிகிச்சை செலவினை ஏற்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக நோய்வாய்ப்பட்டு இறந்தாலும் நிதியுதவி வழங்கப்படும். ‘ஆரோக்கியம்’ திட்டத்தின் கீழ் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதற்காக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து களப்பணியாளர்களுக்கும் ஜிங்க் மாத்திரைகள் மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

கொரோனா சிறப்பு நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டதன் விபரம்

24.3.2020 அன்று ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்னர் 3280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு நிவாரணத் திட்டம் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. அனைத்து 2.01 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசியுடன், 1 கிலோ துவரம்பருப்பு, 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்பட்டது. மே மாதத்திற்கான அந்த 2 கோடியே 1 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி வாங்கிய அந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு 50 கிலோ அரிசி வழங்கப்பட்டது. அதேபோல, துவரம்பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்பட்டது.

அடுத்த மாதம் ஜூன் மாதத்திற்கும், அதேபோல் 4 பேர் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 50 கிலோ அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு விலையில்லாமல் வழங்கப்படும்.ஜூன் மாதத்திற்கான டோக்கன்கள் மே 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டு ஜூன் 1 முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும்.

24 லட்சம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு 15 நாட்கள் உலர் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் முன்னேற்பாடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் நல வாரியத்தை சார்ந்த 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கும், ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான இரண்டு தவணையாக தலா 1000 ரூபாய் ரொக்கமாக நிவாரணம் வழங்கப்பட்டது. முதல் தவணை – 89 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது, இரண்டாவது தவணை – 88 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது. 16.5.2020 அன்று முடிதிருத்தும் நல வாரியங்களில் பதிவு செய்யாத விடுபட்ட முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இரண்டு தவணைக்கான நிவாரணம் 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

அனைத்து வெளிமாநில தொழிலாளர்களுக்கும், 15 கிலோ அரிசியுடன் 1 கிலோ துவரம்பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி நிவாரணமாக வழங்கப்பட்டது. பட்டாசுத் தொழிலாளர்களுக்கு அவர்களுடைய கோரிக்கையை ஏற்று ரூ.1000 நிவாரண தொகை வழங்கப்பட்டது. தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் 21,770 பேர் எங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென்று அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். அவர்களுக்கும் தலா 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. அம்மா உணவகங்களின் மூலமாக தினமும் 7 லட்சம் ஏழை எளிய மக்களுக்கு வயிராற சுகாதாரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது.

250க்கும் மேற்பட்ட சமுதாய உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டு, தினசரி சராசரியாக 1.50 லட்சத்திலிருந்து 2 லட்சம் வரை ஆதரவற்றோர், முதியோர், வெளிமாநிலத் தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள் பயன்பெற்று வருகின்ற வகையில் அவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தாக்கத்திற்குப் பின் குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வெளியேறும் ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டது.

ஆர்.பி.ஐ முன்னாள் ஆளுநர் டாக்டர் சி. ரெங்கராஜன் தலைமையில் பொருளாதார மீட்பு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடன், வேளாண் பயிர் கடன்கள், வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெற்ற கடன்கள், மீனவர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெற்ற கடன்களை திருப்பி செலுத்தவும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சொத்துவரி, குடிநீர் வரி ஆகியவற்றை செலுத்த மூன்று மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இடைநிலை மூலதன கடன் உதவி – 22 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் வழங்குவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.ஊரகத் தொழில் மேம்பாட்டிற்காக – கொரோனா சிறப்பு நிதி உதவித் தொகுப்பு திட்டம் – 300 கோடி ரூபாய் வழங்குவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.

மருத்துவ உபகரணங்களின் தற்போதைய கையிருப்பு
வென்ட்டிலேட்டர்களின் எண்ணிக்கை – 3,371
அரசு – 2,501 (இதில் 560 புதியதாக வாங்கியது)
தனியார் – 870

மும்மடிப்பு முகக் கவசங்கள்- வரப்பெற்றது-1.34 கோடி, கையிருப்பு-32 லட்சம் இருக்கிறது.
என்-95 முகக் கவசங்கள்- வரப்பெற்றது – 20 லட்சம், கையிருப்பு-3 லட்சம் இருக்கிறது.
பிபிஈ முழு உடல் பாதுகாப்பு கவசங்கள் வரப்பெற்றது -9.5 லட்சம், கையிருப்பு-3 லட்சம் இருக்கிறது.

ஆய்வக உபகரணம் பிசிஆர்,விடிஎம் தொகுப்பு – வரப்பெற்றது 9.14 லட்சம், கையிருப்பு-1.76 லட்சம்.

ஆக இன்றைக்கு அரசை பொறுத்தவரைக்கும், வேகமாக துரிதமாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள ஆய்வக பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை – அரசு 42 + தனியார் 28 என மொத்தம் 70 பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. மொத்தம் உள்ள 70 மையங்களில் நாளொன்றுக்கு இன்றைக்கு 12,000-க்கு குறையாமல் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.

கொரோனா சிகிச்சைக்கான பிரத்யேக அரசு மருத்துவமனைகள் – 23கொரோனா சிகிச்சைக்கான தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகள் கொண்ட அரசு மருத்துவமனைகள் – 188 பயன்பாட்டில் இருக்கின்றன.கொரோனா சிகிச்சைக்கான தனிமைப் படுத்தப்பட்ட பிரிவுகள் கொண்ட தனியார் மருத்துவமனைகள் – 169 செயல்பட்டு வருகின்றன. தனிமைப் படுத்தப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கை 35,646.தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கை 4,018. இதுவரை பரிசோதிக்கப் பட்டவர்கள் – 4,55,216.நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் – 19,372.தீவிர கண்காணிப்பில் உள்ளவர்கள் – 89,082 சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியோர் எண்ணிக்கை – 10,548. இது54.45 சதவீதம் ஆகும். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை- 145. இது 0.75 சதவீதம் ஆகும்.

அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு எவ்வித தடையில்லாமல் கிடைக்க கூடிய சூழ்நிலையை அரசு உருவாக்கி உள்ளது
இன்றைக்கு காய்கறிகள் மக்களுக்கு எல்லா பகுதிகளிலுமே எளிதாக கிடைக்கக்கூடிய சூழ்நிலையை நம்முடைய வேளாண் துறை அதிகாரிகள் செய்திருக்கின்றார்கள். உள்ளாட்சித் துறை அதிகாரிகளும் இணைந்து இதனை செயல்படுத்தியதன் விளைவாக காய்கறி விலை ஏறாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. வேளாண் பணிகள் எவ்வித தடையும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. அதேபோல, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையில்லாமல் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகின்றது.

இன்றைக்கு காய்கறி விலையை குறிப்பிட விரும்புகின்றேன். (கிலோ)
தக்காளி- ரூ.8
உருளைக்கிழங்கு- ரூ.23
பெரிய வெங்காயம்- ரூ.10
கத்தரிக்காய், வெண்டை, முள்ளங்கி – ரூ.20
பாகற்காய், கேரட்- ரூ.20
அவரை, பச்சை மிளகாய், பீட்ரூட்- ரூ.35
ஆகவே, விலை உயராமல் அரசு பார்த்துக் கொள்கிறது. பொதுமக்களுக்கு எவ்வித சிரமமமும் இல்லாமல், அத்தியாவசியப் பொருட்கள் முழுமையாக கிடைக்க அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கின்ற மக்களுக்கு அவர்கள் இருக்கின்ற பகுதிக்கே நம்முடைய அதிகாரிகள் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு சென்று சேர்க்கின்றார்கள். அதுவும் அரசு ஏற்பாடு செய்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல காவல்துறை மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கை.மொத்த வழக்குகள்- 5,08,263 .கைது விவரம்- 5,42,618.வாகன பறிமுதல் – 4,27,689. அபராத வசூல்- 8.36 கோடி ரூபாய் ஆக அரசு துரிதமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இவ்வாறு புள்ளிவிபரங்களுடன் முதலமைச்சர் பேசினார்.