தமிழகம்

ரூ.57 கோடி மதிப்பீட்டில் பள்ளி கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

ரூ.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 28.5.2020 அன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் தருமபுரி, அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருவண்ணாமலை, தேனி, திருவள்ளூர், திருவாரூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 57 கோடியே 53 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 27 பள்ளிக் கட்டடங்கள், 2 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனக் கட்டடங்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தமிழகத்திலுள்ள அனைத்து மாணவ மாணவியரும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கட்டணமில்லா கல்வி, விலையில்லா பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள், சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினிகள், கல்வி உபகரணப் பொருட்கள், காலணிகள், இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகை வழங்குதல், பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடும் வகையில் புதிய வகுப்பறைகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், செட்டிக்கரையில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கட்டடம்; செங்கல்பட்டு மாவட்டம், இலத்தூர் வட்டம், பவுஞ்சூர் மற்றும் நீலகிரி மாவட்டம், கூடலூர் ஆகிய இடங்களில் 5 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனக் கட்டடங்கள், நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ், அரியலூர், கடலூர், தருமபுரி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், திருவண்ணாமலை, தேனி , திருவள்ளூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 22 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 40 கோடியே 11 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், கழிப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர்,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 5 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 8 கோடியே 50 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள் என மொத்தம் 57 கோடியே 53 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 27 பள்ளிக் கட்டடங்கள், 2 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனக் கட்டடங்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.