சிறப்பு செய்திகள்

ரூ.217.27 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட சாலை – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், உத்திரமேரூர், வந்தவாசி, வெம்பாக்கம், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்குட்பட்ட காஞ்சிபுரம் முதல் வந்தவாசி வரை மற்றும் சட்ராஸ் முதல் செங்கல்பட்டு வரையிலான 217 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சாலையை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்தும், பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதிசெய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், உத்திரமேரூர், வந்தவாசி, வெம்பாக்கம், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்குட்பட்ட, காஞ்சிபுரம் முதல் வந்தவாசி மற்றும் சட்ராஸ் முதல் செங்கல்பட்டு வரையிலும், 217 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சாலையை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஊரகத்தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், தலைமைச்செயலாளர் க.சண்முகம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் டாக்டர் அ.அருண் தம்புராஜ், தலைமைப் பொறியாளர் (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்) எம்.கே.செல்வன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.