தற்போதைய செய்திகள்

கிருஷ்ணகிரியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவசமாக எரிபொருள் – கே.பி.முனுசாமி எம்.பி. வழங்கினார்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கி மீண்டும் தொழிலை கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி. தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆட்டோக்கள் இயங்க கடந்த 60 நாட்களாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தமிழக அரசு ஆட்டோக்களில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும், அவ்வப்போது கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுபாடுகளுடன் இன்று முதல் ஆட்டோக்களை இயக்க அனுமதி அளித்தது.

இந்த நிலையில் 60 நாட்களாக வருவாய் இல்லாமல் இருந்த கிருஷ்ணகிரியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எரிபொருட்களை இலவசமாக வழங்கினார். 1200 ஆட்டோக்களுக்கு பெட்ரோல், டீசலில் இயக்க கூடியவர்களுக்கு தலா இரண்டு லிட்டர் எரிபொருளும், கேஸ் மூலம் இயங்கும் ஆட்டோக்களுக்கு தலா 3 கிலோ கேஸ் இலவசமாக வழங்கி அதிலிருந்து தங்களது தொழிலை துவங்க உதவி செய்தார். 1200 ஆட்டோக்களுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கியதால் ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான அசோக்குமார், மாவட்ட அவைத்தலைவர் சைலேஷ் கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட பால்வளத்தலைவர் தென்னரசு, மாவட்ட மாணவரணி செயலாளர் தங்கமுத்து, நகர செயலாளர் கேசவன், காவேரிப்பட்டினம் ஊராட்சிக்குழுத்தலைவர் பையூர் ரவி, காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.