தற்போதைய செய்திகள்

பள்ளிகள் திறப்பு தொடர்பாக முடிவு எடுக்கவில்லை – அமைச்சர் ேக.ஏ.செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு சம்பந்தமாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கார், ஆட்டோ, வேன் தொழிலாளர்கள் 500 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணை, காய்கறி போன்றவற்றை பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனோ இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. தமிழக முதல்வர் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு ஆலோசனைகளையும் தினமும் வழங்கி வருகிறார். மத்திய மருத்துவ குழுவை சார்ந்தவர்கள் தமிழக அரசை பாராட்டும் விதமாக தமிழக மருத்துவத்துறை உள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை தமிழக வேளாண்மை துறை செய்ய தயாராக உள்ளது. சிபிஎஸ்சி ஐ பொறுத்தவரையில் மத்திய அரசின் கொள்கை முடிவுகள் தான் மேலும் மையங்கள் கூடுதலாக தமிழக அரசின் சார்பில் அவர்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் குடிமராமத்து பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன..

ஆன் லைன் வகுப்புகள் சம்பந்தமாக எந்த குழப்பமும் வேண்டாம். தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்று தான் கூறியுள்ளோம். தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட நேரத்தில் மாணவ மாணவியர்கள் ஆன் லைன் மூலம் மட்டும் தான் படிக்க முடியும். ஆகவே ஆன்லைன் மூலம் பாடம் எடுப்பதில் எந்த ஐயப்பாடும் வேண்டாம். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அனைத்து துறையினருடன் இணைந்து முடிவு செய்த பின்னர் தான் தேர்வு சம்பந்தமாக அட்டவணைகள் வெளியிடப்பட்டு உள்ளன..

தமிழக அரசு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது. தேர்வு எழுதவரும் மாணவர் களுக்கு அனைத்து வித ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது. குறிப்பாக விடுதிகள் மூன்று நாட்கள் திறப்பதற்கும் மாணவர்கள் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் வரலாற்றில் முதன்முறையாக மாணவர்கள் எந்த பள்ளிகளில் படித்தார்களோ அந்த பள்ளிகளிலேயே எழுதலாம். 12864 மையங்களில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு சம்பந்தமாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கழக வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், ஆவின் தலைவர் கே.கே. காளியப்பன், கோபி ஒன்றிய கழக செயலாளர் சிறுவலூர் மனோகரன், நகர செயலாளர் பி.கே.காளியப்பன், கே.கே.கந்தவேல்முருகன், ஜி.கே.செல்வராஜ், சையத் யூசுப், விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.