தற்போதைய செய்திகள்

இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி

தூத்துக்குடி

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க முதலமைச்சர் விரைவான நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்துக்குட்பட்ட தருவைகுளம் பகுதியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.சண்முகநாதன், விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட கழக செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

சமீபத்தில் சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 3 மீன்பிடி படகுகளையும். அதேபோல் தருவைகுளம் பகுதியை சேர்ந்த முத்துச்செல்வி என்பவரின் கணவர் அந்தோணி மைக்கேல், என்பவரின் மீன்பிடி படகையும் இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்ற சம்பவத்தை அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் உடனடியாக எங்கள் கவனத்திற்கு தகவலை கொண்டு வந்ததன் காரணமாக நாங்கள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு சென்று நமது மீனவர்களை மீட்க கோரிக்கை வைத்தோம். அதை ஏற்று முதலமைச்சரும் உடனடியாக பிரதமரை தொடர்பு கொண்டு இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுத்தார்

தற்போது கொரோனா தடுப்பு அமலில் உள்ள இலங்கையில் இந்தியாவிலிருந்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை பத்திரமாக மீட்டு இந்தியா கொண்டு வந்து சேர்ப்பதற்கான அத்தனை நடவடிக்கை விரைவாக எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் தருவைகுளம் பகுதியை சேர்ந்த 14 மீனவர்கள் சர்வதேச கடல் படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இதுகுறித்து முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையால் தருவைக்குளம் மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

இவ்வறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஞானகவுரி, தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆறுமுகநேரி கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், மாவட்ட அறநிலையத்துறை தலைவரும் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளருமான மோகன், தருவைகுளம் கூட்டுறவு வங்கி தலைவரும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான அமலதாஸ், ஓட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் வீரபாண்டி என்ற கோபி, தருவைகுளம் ஊராட்சி தலைவர் காடோடி, துணைத்தலைவர் புதுமை சாமி உட்பட ஏராளமானோர்கலந்து கொண்டனர்