தற்போதைய செய்திகள்

அமானிதலாவ், மகேந்திரமங்கலம் ஏரிகளில் குடிமராமத்து பணிகள் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்

தருமபுரி

பாலக்கோடு தொகுதியில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் அமானிதலாவ் ஏரி, மகேந்திரமங்கலம் ஏரியில் குடிமராமத்து பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் ரூ.85.82 லட்சம் மதிப்பீட்டில் அமானிதலாவ் ஏரி மற்றும் 58.94 லட்சம் மதிப்பீட்டில் மகேந்திரமங்கலம் ஏரியில் பிரதம மந்திரி கிரிஷி சினாச்சி யோஜனா திட்டத்தின் கீழ் தூர்வாருதல், பழுதுநீக்குதல் மற்றும் புனரமைப்பு செய்யும் பணிகளையும் மற்றும் பஞ்சப்பள்ளி ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் குடிநீர் விநியோகம் செய்யும் பணியையும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார்.

பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள், குட்டைகளில் நீர் ஆதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் குடிமராமத்து திட்டத்தை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு ஏரிகள் தூர்வாரப்பட்டு, வரத்து கால்வாய்கள் சீர் செய்யப்பட்டு அதன் மூலம் மழைநீரை சேமித்து பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 71 ஏரிகள் தற்போது இத்திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டு உள்ளது. 2020-21ம் ஆண்டில் 14 ஏரிகளை தூர்வார 8 கோடியே 11 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது. தற்போது இப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாலக்கோடு வட்டம் ரூ.85.82 லட்சம் மதிப்பீட்டில் அமானிதலாவ் ஏரி மற்றும் 58.94 லட்சம் மதிப்பீட்டில் மகேந்திரமங்கலம் ஏரியில் பிரதம மந்திரி கிரிஷி சினாச்சி யோஜனா திட்டத்தின் கீழ் தூர்வாருதல், பழுதுநீக்குதல் மற்றும் புனரமைப்பு செய்யும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் 2019-20ம் ஆண்டுகளில் 458 ஏரிகள் குட்டைகள் 16 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பில் தூர்வாரப்பட்டு உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இது வரையில் மொத்தம் 529 ஏரிகள், குட்டைகள் 41 கோடியே 7 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் தூர்வாரப்பட்டு உள்ளது.

தமிழக அரசு அனைத்து பகுதியில் உள்ள மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தருமபுரி நகராட்சி பகுதியில் ஒட்டு மொத்தமாக 10 லட்சத்து 36 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது. சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தருமபுரி நகராட்சிக்கு, பஞ்சப்பள்ளி நீர் ஆதாரத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது பஞ்சப்பள்ளி ஊராட்சி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, போதிய நீர் ஆதாரம் இல்லாத காரணத்தால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய, சுமார் நாளொன்றுக்கு 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுத்து அவர்களுக்கு வழங்கும் திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் உள்ள அனைத்து பொது மக்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டத்தின் மூலம் 5 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நாளொன்றுக்கு தருமபுரி நகராட்சி, பாலக்கோடு மாரண்டஅள்ளி பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய சூழலில் பஞ்சப்பள்ளியில் நீராதாரம் முழுமையாக வறண்டு விட்ட காரணத்தினால் தற்போது ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டும் தான் எடுக்க முடியும். இந்த தண்ணீர் சுமார் 45 கிலோமீட்டர் குழாய்களில் கொண்டு சேர்ப்பது கடினம். எனவே தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் மக்களின் முழுமையான தண்ணீர் தேவைகளை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பில் உலகையே அச்சுறுத்தி வரும் வேளையில் தமிழக அரசு இதை தடுக்கும் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் பொது மக்களின் முழு ஒத்துழைப்புடன் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பாதிப்பு காரணமாக நலிவடைந்த ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண உதவிகளை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. நாளை முதல் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் ஜூன் மாதத்திற்கான பொருட்கள் வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட அறங்காவல் குழுத்தலைவர் கே.வி.அரங்கநாதன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் தொ.மு.நாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி, பொதுப்பணி துறை (நீர்வள ஆதார அமைப்பு) உதவி செயற்பொறியாளர் சரவணகுமார், காரிமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், துணை தலைவர் செல்வராஜ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் சரவணன்,கோவிந்தராஜ், வட்டாட்சியர் ராஜா, பேரூராட்சி அலுவலர்காதர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பழகன், கௌரி, தண்டபாணி, மீனா, உதவி பொறியாளர்கள் சாம்ராஜ், வெங்கடேஷ், பஞ்சப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.