தற்போதைய செய்திகள்

தாந்தோணி ஒன்றியத்தில் ரூ.70.50 லட்சத்தில் முடிவுற்ற பணிகள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

கரூர்

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ.70.50 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளை துவக்கி வைத்து தெரிவித்தார்.

தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டாங்கோவில் மேற்கு, ஆண்டாங்கோவில் கிழக்கு ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் ரூ.70.50 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளை துவக்கி வைத்தார்.

ஆண்டாங்கோவில் மேற்குஊராட்சியில் காவல்காரன் தெருவில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் நாடகமேடை அமைப்பதற்கும், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி பெரியார் நகரில் ரூ.8 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை அமைப்பதற்கும், சின்னஆண்டாங்கோவிலில் ரூ.8 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணிகளையும் துவக்கிவைக்கும் நிகழ்வாக பூமிபூஜை நிகழ்வில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு கட்டுமானப்பணிகளை துவக்கி வைத்தார். ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிபெரியார் நகரில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினையும், ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சிக் கூடத்தினையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:-

அம்மா அவர்களின் நல்லாசியோடு, மக்களுக்கான ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் அடித்தட்டு ஏழை, எளிய மக்களின் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்தி செய்திடும் வகையில் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஆண்டாங்கோவில் கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சிகளில் ரூ.70.50 லட்சம் மதிப்பில் முடிவுற்ற பல்வேறு பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, மேலும், புதிய பணிகளும் துவங்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி வளர்ச்சி நிதி, ஊராட்சி நிதி, சிறப்பு ஒப்பளிக்கப்பட்ட வருவாய் நிதி, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதி ஆதாரங்களின் மூலம் சாலை மேம்பாடு, சமுதாயக்கூடங்கள் கட்டுதல், நாடக மேடை கட்டுதல், கழிவுநீர் வடிகால் கட்டுதல், குடிநீர்த்தேவைக்கான பணிகள், உள்ளிட்ட அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில், கரூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினராகிய எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மட்டும் 175 பணிகள் ரூ.9 கோடியே 53 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் இயக்குநர் எஸ்.கவிதா, நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிக, திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் ஆலம்தங்கராஜ், தாந்தோணி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சிவகாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிறிஸ்டி, ஊராட்சி மன்றத்தலைவர்வர்கள் எஸ்.சாந்தி (ஆண்டாங்கோவில் கிழக்கு), கே.எம்.பெரியசாமி (ஆண்டாங்கோவில் மேற்கு), ஊராட்சி ஒன்றிய உதவிப்பொறியாளர் குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.