தற்போதைய செய்திகள்

காட்டாறு, பாமிணியாற்றில் தூர்வாரும் பணி – அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் ஆய்வு

திருவாரூர்

திருவாரூர் வட்டம் காட்டாறு, பாமிணியாற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், புலிவலம் ஊராட்சிக்குட்பட்ட காட்டாற்றில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூர்வாரூம் பணி, திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட துரைக்காடு ஊராட்சிக்குட்பட்ட பாமிணியாற்றில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணி ஆகியவைகளை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளின் முன்னேற்றம் குறித்து செயற்பொறியாளரிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் முதல்வர் உத்தரவின்படி தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, டெல்டா பகுதிகளில் சிறப்பு தூர்வாரும் பணிகள், குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருவதை முதலமைச்சர் கண்காணித்து வருகிறார்கள். சென்ற ஆண்டு முதல்வர் ரூ.499 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பு தூர்வாருதல் மற்றும் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். அதனடிப்படையில் கடந்த ஆண்டு டெல்டா பகுதிகளில் எடுக்கப்பட்ட பணிகளில் ஓரிரு பணிகளை தவிர மற்ற பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குக்குள் முழுமையாக முடிவடைந்தது. இதனால், சென்ற ஆண்டு விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் காணப்பட்டது.

இந்த ஆண்டு எதிர்வரும் ஜூன்-12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வரால் உத்தரவிடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 88 பணிகளும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 106 பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தண்ணீர் வருவதற்கு முன்பாகவே, விரைவாக முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை கண்காணிக்க முதலமைச்சர் மூத்த இந்திய ஆட்சியப்பணியாளர்களை சிறப்பு அதிகாரிகளாக நியமித்து தூர்வாரும் பணிகளை கண்காணித்து வருகிறார்.

இந்த ஆண்டும், கடந்த ஆண்டை போல குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்து தூர்வாரும் பணிகளும் முடிக்கப்பட்டு விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கடைமடை வரை சென்று விவசாயமும் செழிப்பாக இருக்கும். இன்றைய தினம், திருவாரூர் வட்டம், புலிவலம் ஊராட்சிக்குட்பட்ட காட்டாற்றில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்யப்பட்டது.

இதன் மூலம் 1565 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலும், திருமதிகுன்னம், தாளக்குடி, புலிவலம், தப்ளாம்புலியூர், சோத்திரியம் ஆகிய கிராமங்கள் பாசன வசதியும், வடிகால் வசதியும் பெறுகின்றனர். அதேபோல், திருத்துறைப்பூண்டி வட்டம், துரைக்காடு ஊராட்சிக்குட்பட்ட பாமிணியாற்றில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணியும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் முதல்வர் கடந்த ஏப்ரல், மே மாதம் போன்று ஜூன் மாதத்திற்கும் விலையில்லாமல் அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவைகள் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விலையில்லா பொருட்களை டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தொடர்புடைய நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்று கொள்ள வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை சரியாக செய்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மணிவண்ணன், வெண்ணாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் முருகவேல், உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் ஜெயபிரீத்தா, வட்டாட்சியர் நக்கீரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.