மற்றவை

தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது – அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதம்

ஈரோடு

மக்கள் நல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதால் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதத்துடன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தளவாய்பேட்டை வினோபாநகர், வாய்க்கால்பாளையம் பகுதிகளில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்.கே.சி.கருப்பணன் பேசியதாவது:-

தமிழக முதலமைச்சர் எடப்பாடிகே. பழனிசாமி இந்தியாவிலேயே அதிகளவில் மக்கள் நல திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார். மக்கள் நல திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக செயல்படுத்தப்படுவதால் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத, ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில், சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக அந்தப் பகுதியிலேயே சிகிச்சை பெறக்கூடிய அளவிற்கு தமிழ்நாடு முழுவதும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் 2,000 முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை தொடங்கி வைத்தார். அந்த வகையில் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, குப்பிச்சிப்பாளையம், குறிச்சி மற்றும் பட்லூர் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் 21.12.2020 அன்று திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தளவாய்பேட்டை வினோபாநகர் மற்றும் வாய்க்கால்பாளையம் ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் துவங்கி வைக்கப்படுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 வழங்கி வந்ததை உயர்த்தி தற்பொழுது ரூ.2,500 ரொக்கம் மற்றும் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ அரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு ஒரு துண்டுக்கு பதிலாக ஒரு முழுக் கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளார். எனவே, பொதுமக்கள் அரசின் இத்தகைய சிறப்பான திட்டங்களை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில் பவானி வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், கழக பொதுக்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கே.கே.விஸ்வநாதன், ஆவின் இயக்குனர் வாத்தியார் குப்புசாமி, முன்னாள் ஆவின் துணைத்தலைவர் வி.ஏ.சுப்பிரமணியம், ஜம்பை பேருராட்சி கழக செயலாளர் என்.எம்.ராமசாமி, அவைத்தலைவர் ஜெ.எம்.பெருமாள், முன்னாள் பேரூராட்சி தலைவர் தளவாய்பேட்டை டி.கே.சீனிவாசன், கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.எஸ்.கே.துரை, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் குணசேகரன், ஒன்றிய பாசறை செயலாளர் சரவணன், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ராஜா (எ) யோகானந்த், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் வி.திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.