சிறப்பு செய்திகள்

திரைப்படத் தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்புகள் கட்டும் பணி – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

சென்னை

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழ்நாடு அரசின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன உறுப்பினர்களின் நலனிற்காக 50 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அவ்விடத்தில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மூலம் திரைப்படத் தொழிலாளர்களுக்கு 6,000 குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக 1,000 குடியிருப்புகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளுக்கு முதலமைச்சர் இன்று (நேற்று) அடிக்கல் நாட்டினார்.

மேலும், 26.8.2018 அன்று பையனூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் திறப்பு விழாவில், அம்மாவின் பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி, முதற்கட்டமாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் 16.9.2019 அன்று தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, தற்போது இரண்டாம் கட்டமாக, அம்மாவின் பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் நேற்று தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, தலைமைச் செயலாளர் க.சண்முகம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் பொ.சங்கர், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் அங்கமுத்து சண்முகம் மற்றும் பொருளாளர் சாமிநாதன், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.