தமிழகம்

ரூ.89 லட்சத்தில் கண்மாய்கள் சீரமைப்பு பணி – துணைமுதலமைச்சர் நேரில் ஆய்வு

தேனி:-

குடிமராமத்து திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் ரூ.89 லட்சத்தில் கண்மாய்கள் சீரமைக்கும் பணியை
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், பி.அம்மாபட்டி கிராமம் பி.மீனாட்சிபுரம் கண்மாயில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் (2020-2021) ரூ.89 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவிபல்தேவ் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது:-

தமிழக அரசு தமிழகத்தில் வறட்சியை எதிர்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும் விவசாயிகளின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்கும் பண்டைய குடிமராமத்து திட்டத்தினை செயல்படுத்திட உத்தரவிடபட்டு தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆதாரங்களில் புனரமைக்கும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் உள்ள குளங்களில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் (2020-2021) திட்டத்தின் கீழ் போடிநாயக்கனூர் வட்டம், பி.அம்மாபட்டி கிராமம் பி.மீனாட்சிபுரம் கண்மாயில் ரூ.89 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைக்கும் பணிகள் தொடர்பாக இன்றைய தினம் ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டது.

இக்கண்மாய்க்கு கொட்டக்குடி ஆற்றில் ராஜவாய்க்கால் அணைக்கட்டு வழியாக சுமார் 8.00 கி.மீ தூரம் தண்ணீர் பயணித்து பி.மீனாட்சிபுரம் கண்மாயை வந்தடைகிறது. இக்கண்மாயின் கழிவு நீர், கழிவு நீர் வாய்க்கால் வழியாக சென்று செட்டிகுளம் மற்றும் டொம்புச்சேரி அம்மன் கண்மாயை சென்றடைகிறது. இக்கண்மாயில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணி, மடை மறு கட்டுமானம், சட்டர் அமைக்கும் பணி, மடை பாசன வாய்க்காலில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி ஆகிய சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதன் மூலம் நீர் வீணாகாமல், கண்மாய்களுக்கு நேரடியாக சென்று, இக்கண்மாய்கள் மூலம் பாசனம் பெறும் 183.64 ஹெக்டேர் பாசன பரப்பு உறுதிசெய்யப்படுவதுடன் , மறைமுகமாக 80 கிணறுகள் மற்றும் 120 போர்வெல்கள் மூலம் சுமார் 350 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும்.

இதன்மூலம் இக்கண்மாயை சுற்றியுள்ள விசுவாசபுரம், பத்ரகாளிபுரம், பி.அம்மாபட்டி, பி.மீனாட்சிபுரம் கிராமங்களுக்கு குடிநீர் வசதி பெறுவதுடன், இப்பணிகள் மேற்கொள்வதன் மூலம் கால்வாயில் தண்ணீர் தங்குதடையின்றி சென்று கண்மாயை விரைந்து அடையும். வெள்ளக்காலங்களில் வாய்க்கால் மற்றும் கண்மாயில் உடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் தேவை மற்றும் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் தங்குதடையின்றி கிடைத்திட வழிவகை செய்திடும் பொருட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஆய்வின்போது நீரினைப்பயன்படுத்துவோர் சங்க உறுப்பினர்களிடம் இப்பணி தன்மை குறித்தும், குடிமராமத்து திட்டப்பணிகளை சிறப்பான முறையில் பணிகள் மேற்கொள்ளுவது குறித்தும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.

முன்னதாக போடிநாயக்கனூர் வட்டம் மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார். இதில் போடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ஆழ்துளைக்கிணறுகள் அமைத்து, அதன்மூலம் மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி பகுதியில் சீரான குடிநீர் வழங்குவதற்கும் அவர் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, கம்பம்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட ஊராட்சித்தலைவர் பிரிதா, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவிப்பொறியாளர் மல்லிகா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) விஜயலெட்சுமி, உதவி செயற்பொறியாளர் (பேரூராட்சிகள்) ராஜாராம், வட்டாட்சியர் மணிமாறன் மற்றும் விவசாயிகள் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.