தற்போதைய செய்திகள்

கிராமசபை கூட்டங்கள் நடத்தி திமுக சார்பில் பெறப்பட்ட மனுக்கள் என்ன ஆனது? அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கேள்வி

விருதுநகர்

திமுக சார்பில் கிராமசபை கூட்டங்கள் நடத்தி பெறப்பட்ட மனுக்கள் என்ன ஆனது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.

சிவகாசி அருகே ஈஞ்சார் நடுவப்பட்டி மற்றும் செவலூர் புதுக்கோட்டையில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் மூலம் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாய சங்கங்களின் பங்களிப்போடு குடிமராமத்து திட்டப் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதல்வர் எடப்பாடியார் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதிலும் உள்ள கண்மாய்கள், வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இதை மக்கள் வரவேற்கிறார்கள். விருதுநகர் மாவட்டம் முழுவதும் 54 கண்மாய்களில் குடி மராமத்து பணிகள் செய்யப்படுகின்றன. இதில் அந்தந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. மதுக்கடைகளை அரசு விரும்பி திறக்கவில்லை. எந்த பாதிப்பும் மக்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே திறந்துள்ளோம். மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கைகளை முதலமைச்சர் ஈடுபட்டு வருகிறார்.

அரசின் அறிவிப்புகள் மக்களின் நன்மைக்காக மட்டுமே இருக்கும். நாங்கள் ஏசி ரூமில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர்கள் அல்ல. திமுகவிற்கு 6 லட்சம் மனு வந்ததாகவும், அதில் 5 லட்சம் மனுவிற்கு நடவடிக்கை எடு்த்துவிட்டோம் என்றும் மீதமுள்ள ஒரு லட்சம் மனு சிறு குறு தொழில் சம்பந்தப்பட்டது என்றும் தலைமை செயலாளரிடம் திமுகவினர் மனுக்களை கொடுத்துள்ளனர்.

அவர்கள் கொடுத்த மனுவில் அரிசி, பருப்பு, துணி வகைகள் கேட்டுத்தான் அனைத்து மனுக்களும் உள்ளன. திமுகவினர் வாங்கிய மனுக்களுக்கு திமுக அறக்கட்டளை மூலமே நிவாரணம் வழங்கலாம். பொய்களை சொல்வதற்கு ரூ.350 கோடியில் வடநாட்டில் இருந்து பிரசாந்த் கிஷோரை கூட்டி வந்து விளம்பரம் செய்யும் அந்த ரூபாயில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 5 கோடி ரூபாய் நிவாரணம் திமுக வழங்கலாம்.

ஏப்ரல், மே, ஜூன் மூன்று மாதங்களுக்கும் ரேசன் கடையில் அரிசி பருப்பு எண்ணெய் ஆகியவற்றை எடப்பாடியார் அரசு ஏழை மக்களுக்கு விலையில்லாமல் கொடுத்து வருகிறது. முதலமைச்சரின் சிறப்பு முகாம் மூலம 10 லட்சம் மனுக்கள் வரப்பெற்று அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதிவாய்ந்த மனுக்கள் அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. எம்பி தேர்தலுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் முன்னாள் திமுக அமைச்சர்கள் கிராமம் கிராமமாக சென்று கிராம சபை கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் மனு வாங்கினார்.

வாறுகால் கட்டி தருவோம் ரோடு போட்டு தருவோம். முதியோர் பென்சன் வாங்கி தருவோம் என்று கூறி பொதுமக்களை ஏமாற்றி மனுக்கள் வாங்கினர். அந்த மனுக்களை திமுகவினர் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. அந்த மனு எங்கே சென்றது என்று யாருக்கும் தெரியாது. இந்த தொகுதி எம்பி இந்த பகுதியில் ஓட்டும் கேட்டு வரவில்லை. நன்றி கூறவும் வரவில்லை. பொதுமக்களுக்கு பிரச்சனை என்றால் தெருவிற்கு ஓடிவருவது என்னை போன்ற கழக தொண்டர்கள் தான். விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் தாமிரபரணி குடிநீரை கொண்டு வந்துள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.