தமிழகம் தற்போதைய செய்திகள்

5 குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு தலா ரூ.25 லட்சம் கடன் தொகை – முதலமைச்சர் வழங்கினார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 5 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் ‘‘கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்” என்ற திட்டத்தினை முதலமைச்சர் 31.3.2020 அன்று அறிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அவரவர் இருப்பிடத்திலிருந்தே நேரடி தொடர்பின்றி இணையதளம் மூலம் விரைவாக 25 லட்சம் ரூபாய் வரை தமிழ்நாடு அரசின் 6% வட்டி மானியத்துடன் பிணை சொத்தின்றி கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்று, இன்று வரை 855 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கை யாளர்களுக்கு மொத்தம் 112 கோடி ரூபாய் கடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 5 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் கடன் தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் இன்று (நேற்று) வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா, டைடல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) கா.ப.கார்த்திகேயன், டைடல் நிறுவன மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் கே.பி.கார்த்திகேயன், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தொழில்துறையினர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.