தற்போதைய செய்திகள்

கொரோனா தான் எதிரியே தவிர நோயாளிகள் நமக்கு எதிரி அல்ல – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை

கொரோனா தான் எதிரியே தவிர கொரோனா நோயாளிகள் அல்ல என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விமானங்கள், ரயில்கள், இ-பாஸ் பெற்று வரக்கூடியவர்களால் கொரோனா தொற்றை சமாளிப்பதில் கூடுதல் சவால் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னையில் மக்கள்தொகை நெருக்கடி ஆகியவை சவால்களாக உள்ளன. பொது மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே உள்ள 500 படுக்கைகளுடன் சேர்த்து கூடுதலாக 400 படுக்கைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 2-3 நாட்களில் முழுமையாக தயாராகி விடும்.

மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் 100 நாட்களாக தொடர்ந்து பணி செய்து வருகின்றனர். ஓய்வு பெற்றவர்கள் பணி செய்ய தானாக முன்வருகின்றனர். கூடுதல் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பெரும்பாலானோர் முகக்கவசம் அணிகின்றனர். அது நல்ல விஷயம். பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்.

சாதாரண காய்ச்சல், சளி உள்ளவர்கள் நிச்சயமாக பொது போக்குவரத்தைப் பயன்படுத்தக் கூடாது. கொரோனா தான் எதிரியே தவிர கொரோனா நோயாளிகள் நமக்கு எதிரி அல்ல. எனவே, நோய் குறித்த வெறுப்பின்றி அவர்கள் பரிசோதனைக்கு வர வேண்டும். யாரும் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளக் கூடாது. தாமதமாக மருத்துவமனைக்கு வருபவர்களால் தான் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சவால் ஏற்படுகிறது. மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம். அப்போதுதான் இந்த தொற்றிலிருந்து மீள முடியும். கொரோனா சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கான கட்டணத்தை அரசு உறுதி செய்யும்.

ஓரிரு நாளில் முதல்வர் காப்பீடு கட்டணம் மற்றும் சிகிச்சை கட்டணம் தொடர்பாக முறையான அறிவிப்பு வெளிவரும்
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஃபிளாஸ்மா தெரப்பி மூலம் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வயதானவர்களில் ஒன்றரை லட்சம் பேரை கண்டறிந்து பரிசோதனை செய்து தொடர்நது கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.