திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் விரைவில் ரூ.50 கோடியில் புதிய பால்பண்ணை – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தகவல்

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் விரைவில் 50கோடி ரூபாய் மதிப்பீட்டில் பால்பண்ணை அமையவுள்ளது முன்னாள் அமைச்சரும், மாவட்ட பால் கூட்டுறவு சங்கத்தலைவருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரளூர் கிராமத்தில் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுசங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட பால் கூட்டுறவு சங்கத்தலைவருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மகளிர் பால் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்தார். விழாவிற்கு ஆவின் பொது மேலாளர் இளங்கோ தலைமை தாங்கினார். பால் கூட்டுறவு சங்கத்தலைவர் பேபிவெங்கட்ராமன், வரவேற்றார். துணைப்பொது மேலாளர் ராமச்சந்திரன், மேலாளர் காளியப்பன், ஊராட்சி மன்ற தலைவர் ஜான்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின்போது முன்னாள் அமைச்சரும், மாவட்ட பால் கூட்டுறவு சங்கத்தலைவருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வீரளுரில் புதிய பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கம் துவங்கப்பட்டுள்ளது. இச்சங்கத்திற்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது. மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளது. மாவட்டத்தில் 37 குளிரூட்டும் நிலையம் உள்ளது. மேலும் கூடுதலாக 5 குளிரூட்டும் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதில் ஒரு குளிரூட்டும் நிலையம் வீரளூரில் அமைக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சென்னையில் ஆவின் பால் சுமார் 12 லட்சம் லிட்டர் விற்பனையாகும், தற்போது 7.5 லட்சம் லிட்டர் பால் மட்டுமே விற்பனையாகிறது.

இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உற்பத்தியாகும் பால் அதிகளவில் தேக்கம் ஏற்படுகிறது, அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பாலை பவுடராக தயார் செய்ய வேலூர், சித்தூர் ஆகியபகுதிகளில் உள்ள பால் பவுடர் உற்பத்தி நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. மாவட்டத்தில் வாரத்திற்கு ஒருநாள் பால் கொள்முதல் செய்வதை நிறுத்தப்பட்டு வரும் நிலையினை மாற்றி தினமும் பால் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் வாரம் முதல் தினமும் பால் கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதியதாக 5 மாவட்டங்களில் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் அறிவிக்கப்பட்டதில் திருவண்ணாமலை மாவட்டமும் ஒன்று இச்சங்கத்திற்கு 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பால்பண்ணை துவக்கிட விரைவில் முதல்வர் அறிவிக்கவுள்ளார். இப்பண்ணை வந்து விட்டால் மேலும் அதிகளவில் பால் கொள்முதல் செய்து பால் பவுடர் உள்ளிட்ட பல்வேறு பால் சம்மந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யலாம்.

இவ்வாறு மாவட்ட பால் கூட்டுறவு சங்கத்தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் நைனாக்கண்ணு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எஸ்.கோவிந்தராஜன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இ.என்.நாராயணன், வேளாங்கண்ணி நகர் பால் உற்பத்தியாளர் சங்கத்தலைவர் பழனிராஜன் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா கல்வி அறக்கட்டளை தாளாளர் பர்வதம், பால் கூட்டுறவு சங்கத் துணைத்தலைவர் காமாட்சி துரை, மங்கலம் கூட்டுறவு சங்க செயலாளர் பரணி, விரிவாக்காளர் கலைச்செல்வி, சங்க இயக்குநர்கள் கே.லலிதா, எ.கௌசர்ஜமீன், டி.கீதா, ஏ.ஏசுமேரி, வி.ஜெயமேரி, வி.தமிழ்த்தென்றல், எ.கமுர்ணாபி, ஜி.பஞ்சாமிர்தம், எ.மும்தாஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.