தற்போதைய செய்திகள்

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஜிங் மாத்திரை, கபசுரக்குடிநீர் சூரணம் – அமைச்சர்கள் வழங்கினர்

மதுரை

மாதாந்திர அரசு உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஜிங் மாத்திரைகள், கபசுரக் குடிநீர் சூரணம் ஆகியவற்றை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வழங்கினர்.

மதுரை மாவட்டம், உலகத்தமிழ் சங்கம் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், தலைமையில் மாதாந்திர அரசு உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஜிங் மாத்திரைகள், மற்றும் கபசுரக் குடிநீர் சூரணம் ஆகியவற்றை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவிக்கையில்:-

கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவில் தமிழகத்தில் வராமல் தடுப்பதற்கு பல்வேறு மருத்துவர்கள் மற்றும நிபுணர்கள் வழங்கிய அறிவுரைகளின் படி முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். முதலமைச்சர் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகிறார். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படுகின்றது. இதற்காக இந்த நிதி ஆண்டில் 4300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள 5 லட்சம் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் 98.69 சதவிகிதம் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் தான் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விலையில்லாமல் அரிசி மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மதுரை மாநகாரட்சி நிர்வாகம் மற்ற மாநகராட்சிக்கு முன்னுதாரணமாக பல்வேறு பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஜிங் மாத்திரைகள், கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கையால் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்குள் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவிக்கையில்:- 

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் சீரிய நடவடிக்கையின் காரணமாகவும், வரும்முன் காப்போம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமகவும் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக மதுரை மாவட்டம் திகழ்கிறது. முதலமைச்சர் உத்தரவினை ஏற்று மாதாந்திர உதவித்தொகை பெறும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு தமிழ்நாட்டில் முதன்முறையாக மதுரை மாவட்டத்தில் தான் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த கபசுரக் குடிநீர், ஜிங்க் மாத்திரைகள், மல்டி விட்டமின் மாத்திரைகள் வழங்கும் திட்டம் இன்று துவக்கி வைக்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கு முன்மாதிரியாக ஏற்கனவே மதுரை மாநகராட்சியில் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது பாராட்டுக்குரியதாகும். கபசுரக் குடிநீரை காலை உணவு எடுப்பதற்கு முன்பாக தொடர்ந்து 3 நாட்கள் குடிக்க வேண்டும். மல்டி விட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகளை 10 நாட்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு எளிதில் தொற்று ஏற்படும் என்ற அடிப்படையில் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 55 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இதுபோன்று அரசு வழங்கும் மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீரை உட்கொள்ள வேண்டும். இதனால் அச்சப்படத் தேவையில்லை, இவையனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரன், மதுரை வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம், தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்பு திட்டம்) முருகேசன், உதவி ஆணையாளர் (மதுரை மாநகராட்சி) பிரேம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.