திருவள்ளூர்

மக்களின் பேராதரவுடன் கழகமே மீண்டும் ஆட்சி அமைக்கும் – வி.அலெக்சாண்டர் எம்எல்ஏ பேட்டி

அம்பத்தூர்

கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை செய்ததன் மூலம் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களின் பேராதரவுடன் கழகமே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ கூறினார்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட வார்டு 85ல் உள்ள கண்ணாத்தாள் அம்மன் கோவில் குளம் , வார்டு 79ல் உள்ள பெரிய கோவில் குளம், 82-வது வார்டில் உள்ள சுமார் 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாங்கள் ஏரி ஆகியவை தூர்வாரப்பட்டு பூங்கா பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு அந்தபணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

அந்த பணிகளை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு எத்தனை மீட்டர் ஆழம் தூர்வாரப்படுகிறது, எவ்வளவு மீட்டர் உயரம் கரை கட்டப்படுகிறது. குளத்திற்கு வரும் மழைநீரை எத்தனை அடி வரை தேக்கி வைக்க முடியும் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அம்பத்தூர் தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க 11 கோயில் குளங்கள் தூர்வாரப்பட்டு அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டும், குளங்களைச் சுற்றி சிறுவர் விளையாட்டு திடல், நடைபயிற்சி செல்லும் வகையில்
பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் கள்ளிக்குப்பம் பகுதியில் 18 ஏக்கரில் நடைபயிற்சியுடன் கூடிய பூங்கா மற்றும் குளத்தை தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகள் விரைந்து பணிகளை முடிக்க கேட்டுக் கொண்டோம். இன்னும் இரண்டு மாதங்களில் பணிகள் நிறைவுபெற்று முதலமைச்சரின் திருக்கரங்களால் இந்த பூங்காக்கள் திறக்கப்படும். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் கழகத்தினர் தமிழக மக்களுக்கு சிறப்பான சேவையை செய்ததன் எதிரொலியாக வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தமிழக மக்களின் பேராதரவுடன் கழகம் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இவ்வாறு வி.அலெக்சாண்டர் எம்.எ.ல்ஏ கூறினார்.

இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆனந்தராஜ், சதிஷ்குமார், சுந்தரேசன், மற்றும் பகுதி கழக செயலாளர் என்.அய்யனார், எஸ்.கிருஷ்ணன், முகப்பேர் எஸ்.பாலன், கோதண்டம், எம்.டி.மைக்கேல்ராஜ், கே.பி.முகுந்தன், டன்லப் எஸ்.வேலன், மீனா பாண்டியன் சுந்தர பாபு, டிம்பர் ரவி, கேபிள் ராஜசேகர், ரவி,கள்ளிகுப்பம் செல்வராஜ், பிரபாகரன், எல்.ஜி பிரகாஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.