தற்போதைய செய்திகள்

2021 தேர்தலில் கழகம் மகத்தான வெற்றிபெறும் – ஆர்.எஸ்.ராஜேஷ் உறுதி

சென்னை

முதலமைச்சரின் எண்ணற்ற பல திட்டங்கள், முழு வீச்சில் நடைபெறும் நிவாரண பணிகள் மூலம் 2021ல் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் கழகம் மகத்தான வெற்றிபெறும் என்று ஆர்.எஸ்.ராஜேஷ் உறுதி அளித்துள்ளார்.

முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி கோடை வெயில் காலத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க பெரம்பூர் தொகுதி கொடுங்கையூர் பகுதி முத்தமிழ் நகரில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய குடிநீர் தொட்டி திறப்பு விழா நேற்று பகுதி அம்மா பேரவை செயலாளர் பி.ஜே.பாஸ்கர் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ். ராஜேஷ் கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கான 24 மணி நேரமும் செயல்படும் விலையில்லா குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரை வழங்கினார்.

அப்போது ஆர்.எஸ்.ராஜேஷ், பேசியதாவது:-

கொரோனா தடுப்பு பணிகளை முழுவீச்சில் செயல்படுத்தி இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என முதலமைச்சரை பாராட்டி வருகிறது மத்திய அரசு. இதனை பொறுத்துக் கொள்ளாத தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை கூறி அ.தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை விமர்சனம் செய்து வருகின்றனர்.

கொரோனா சமூகப் பரவலை பல மாவட்டங்களில் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்களும் அரசுடன் இணைந்து சமூக விதிகளை பின்பற்ற வேண்டும். ஒரு சில மண்டலங்களில் சில கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா தொற்றை விரைவில் முழு கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளை கழக அரசு எடுத்து வருகிறது.

குடிநீர் பிரச்சனையை முற்றிலும் தீர்க்க குடிமராமத்துத் பணிகள் மூலம் மாவட்டங்களில் உள்ள கண்மாய்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதேப்போன்று நேற்றைய தினம் 13 மாவட்டங்களுக்கு ரூபாய் 235 கோடியில் துணை மின் நிலையங்களை முதல்வர் திறந்து வைத்துள்ளார்.

மொத்தத்தில் முதலமைச்சர் தலைமையில் வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் நிவாரண உதவிகளும் தி.மு.க.வை சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற, தொகுதிகளில் உள்ள பொதுமக்கள் நன்கு பயனடைந்துள்ளனர் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். தொடர்ந்து இதனை மறைத்து மக்களை திசைத்திருப்பினால் தி.மு.க.வுக்கு தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். முதலமைச்சரின் எண்ணற்ற பல திட்டங்கள், முழு வீச்சில் நடைபெறும் நிவாரண பணிகள் மூலம் 2021ல் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க மகத்தான வெற்றிபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஜெ.கே.ரமேஷ், நாம்கோ சேர்மன் வியாசை எம்.இளங்கோவன், இ.ராஜேந்திரன், பா.இளங்கோவன், டி.கனகராஜ், ஏ.ஆனந்த், ஜெஸ்டின் பிரேம்குமார், கொடுங்கை கோபி, டாக்டர் பவானி, கே.எச்.பாபு, வி.எம்.மதன், இமாம், மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட, பிற அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.