தி.மு.க.வினருக்கு மட்டுமே விடியல்-மக்களுக்கு என்றுமே விடியா அரசு – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு

மதுரை
தி.மு.க.வினருக்கு மட்டுமே விடியல் அரசு, மக்களுக்கு என்றுமே விடியாத அரசு என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடுமையாக தாக்கி உள்ளார்.
மதுரை பெத்தானியபுரம் ராயல் பப்ளிக் பள்ளியில் ஆர்.ஜெ.தமிழ்மணி சாரிடபிள் அன் எஜுகேஷன் ட்ரஸ்ட், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
அம்மாவின் வேதா இல்ல விவகாரத்தில் கழகம் சார்பில் மேல்முறையீடு செய்வோம். கட்சியின் நிதியை பயன்படுத்தி அந்த இடத்தை வாங்குவது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும்.
அம்மா வாழ்ந்து மறைந்த இடம், அங்குதான் அவர் உலகத்தலைவர்களை, முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். எனவே அந்த இடத்தை நினைவு இல்லமாக மாற்றினால் அங்கு வந்து இல்லத்தை சுற்றி பார்க்க இந்தியா மட்டுமின்றி உலக சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவர்.
அம்மா அவர்களின் உறவினர் தீபா, தீபக் ஆகியோருக்கு நான் வைக்கும் வேண்டுகோள். அவர்களாக முன் வந்து வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அனுமதி அளித்தால் வரலாறு அவர்களை பற்றி பேசும். வரலாற்றில் நிலைத்து இருப்பார்கள். மற்ற இடங்களை சொத்துகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும். அதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தும் இல்லை.
7 மாத கால ஆட்சியில் மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் தி.மு.க நிறைவேற்றவில்லை. கழக ஒருங்கிணைப்பாளர்கள் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் குறித்து நாள்தோறும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்
ஒரு நல்ல அரசு என்றால் எதிர்க்கட்சிகள் கூறும் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
ஆகவே இந்த அரசு கழக ஒருங்கிணைப்பாளர்கள் நாள்தோறும் முழக்கமிட்டு வரும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். தி.மு.க அரசை விடியல் அரசு என்று கூறுகிறார்கள். தி.மு.க நிர்வாகிகளுக்கு மட்டும் இது விடியல் அரசு. ஆனால் மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. அதனால் இது மக்களுக்கு விடியா அரசாக இருக்கிறது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.