தற்போதைய செய்திகள்

அரசுக்கு உறுதுணையாக இருந்து கொரோனாவை விரட்ட வேண்டும் – அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள்

தருமபுரி

தமிழக அரசுக்கு உறுதுணையாக இருந்து கொரோனாவை விரட்டிட பாடுபட வேண்டும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாவட்டத்தில் உள்ள தர்மபுரி நகராட்சி மற்றும் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், ஏரியூர், பாலக்கோடு காரிமங்கலம் மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் கூலி தொழிலாளர்களுக்கு கழகத்தின் சார்பில் அரிசி பருப்பு ,எண்ணெய், மைதா, ரவை, கோதுமை, சர்க்கரை,காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தொகுப்பை தர்மபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் கடந்த 2 மாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தர்மபுரி மாவட்ட கழக செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் நேற்று பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டியில் நாடக கலைஞர்கள், தெருக்கூத்து கலைஞர்கள், வாத்திய இசைக் கலைஞர்கள், நையாண்டி மேளக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அத்தியாவசிய பொருட்களின் தொகுப்பை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், உலக அளவில் கொரோனா தொற்று வைரஸ் பரவி வரும் வேளையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவிய போதிலும் தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் நடைபெற்று வரும் அம்மாவின் அரசு அதனை வழிநடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க கொரோனா தொற்று இல்லாத ஒரு நிலையை உருவாக்க நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் அரசு அதிகாரிகளும், கழக உடன்பிறப்புகளும் பொதுமக்களும் முதல்வரின் உத்தரவுக்கேற்ப முழுமையாக அதனை கடைபிடித்து கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும். பொதுமக்கள் முழுமையாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து தமிழக அரசுக்கு உறுதுணையாக இருந்து கொரோனாவை விரட்டிட பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட கவுன்சிலர் காவேரி, ஒன்றிய கழக செயலாளர்கள் செல்வராஜ், ஒன்றிய மாணவரணி செயலாளர் ரவி சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலக்ஷ்மி, ஜிம் முருகன், ஒன்றிய நிர்வாகிகள் கூட்டுறவு சங்க தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.