தற்போதைய செய்திகள்

வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் தமிழகம் வருவோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம்

சென்னை

வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்கு விமானத்தில் வருவோருக்கும், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கும் கொரோனாவை அறிய பிசிஆர் சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விமான பயணத்துக்கான புதிய வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்கு விமானத்தில் வந்தால் கொரோனாவை அறிய பிசிஆர் சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும். வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வருவோர் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். விமானத்தில் பயணம் செய்யும், முன்பாகவே தமிழகத்தில் பயணிப்பதற்கான இ பாஸ் கட்டாயம் பெற வேண்டும். சார்ட்டர்ட் விமானங்களில் பயணிப்போர் பரிசோதனை மற்றும் தனியிடங்களில் (ஓட்டல்) தனிமைப்படுத்தப்படுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோர் இதற்கான விதிவிலக்கை பெற முடியும்.

சென்னையில் இருந்து தமிழகத்தின் மற்ற பாகத்துக்கு செல்லும் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயம் உண்டு. பயணத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திடம் (ஐ.சி.எம்.ஆர்.) பெற்ற கொரோனா இல்லை என்ற சான்றிதழை அளித்தால் பரிசோதனை செய்யப்படமாட்டாது.விமானத்தில் பயணிப்பதற்கு முன்பு இ-பாஸுக்கு விண்ணப்பித்து அதை பெற்றிருக்க வேண்டும். தொழில் விஷயமாக வேறிடத்துக்குச் சென்றுவிட்டு 48 மணிநேரத்துக்குள் திரும்பக் கூடிய பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இல்லாவிட்டால், வீட்டு தனிமைப்படுதலில் 7 நாட்கள் பயணி இருக்க வேண்டும். மேலும் 7 நாட்களுக்கு தனக்கு சுயபரிசோதனையை பயணி மேற்கொள்ள வேண்டும். தமிழகம் திரும்பும் அனைத்து பயணிகளுக்கும் தெர்மல் பரிசோதனை செய்யப்படும். மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோருக்கு பிசிஆர் சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும். வணிக பயன்பாட்டுக்காக 48 மணி நேரத்துக்குள் வெளிநாடு சென்று திரும்புவோர் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். அனைத்து பயணிகளுக்கும் அழியாத மையால் தனிமைப்படுத்தப்படுவதற்கான முத்திரை குத்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது