தற்போதைய செய்திகள்

கொரோனா பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.3 ஆயிரம் கட்டணம் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்

சென்னை

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய் பரிசோதனைக்கு ரூ. 3 ஆயிரம் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு நடத்தினார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 43 அரசு மருத்துவமனைகளிலும் 29 தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா குறித்த மருத்துவ பரிசோதனை மையங்கள் உள்ளன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு அதிக பரிசோதனை மையங்கள் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது, அரசு மருத்துவமனைகளில் உள்ள பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனைக்கு கட்டணங்கள் ஏதும் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது, தனியார் மருத்துவமனைகளில் இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிர்ணயித்தபடி ரூ.4500 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று ஏழை எளிய நடுத்தர மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து முதல்வர் உத்தரவுக்கிணங்க, தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன், பரிசோதனை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கையை தனியார் மருத்துவமனைகளும் ஏற்றுக்கொண்டனர். இனி தனியார் பரிசோதனை மையங்களில் ரூ.3 ஆயிரம் மட்டுமே பரிசோதனை கட்டணமாக வசூலிக்கப்படும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தில் உள்ளவர்களுக்கு ரூ.2500 கழித்து கொள்ளப்படும். அந்த தொகை அரசால் வழங்கப்பட்டு விடும். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மேலும் 400 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 2 நாட்களில் நிறைவேற்றப்படும். கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓய்வுபெற்ற டாக்டர்களும் தாங்களாக முன் வந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

கபசுர குடிநீர் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து இல்லை என்றாலும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க சிறந்த மருந்தாகும். இதுவரை நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் 5 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கபசுர குடிநீர் பாக்கெட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. டாக்டர்கள் செவிலியர்கள் முழு கவச உடை அணிந்து பாதுகாப்புடன் பணியாற்றினாலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். எனினும் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் மீண்டும் பணிக்கு வருகின்றனர். வரும் காலத்தில் கொரோனா வைரஸ் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.