சிறப்பு செய்திகள்

ரூ. 8 கோடி மதிப்பில் வட்டாட்சியர் அலுவலக கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

ரூ. 8 கோடி மதிப்பில் வருவாய்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 1.6.2020 அன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 8 கோடியே 75 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் மற்றும் ஜமுனாமரத்தூரில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்புகள், அரியலூரில் கட்டப்பட்டுள்ள சார்-ஆட்சியர் குடியிருப்பு மற்றும் சென்னை-கிண்டியில் கட்டப்பட்டுள்ள சென்னை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மக்களைத் தேடி அரசு எனும் சீரிய கோட்பாட்டின்படி, அரசின் மக்கள் நலத்திட்டங்களை ஏழை, எளிய மக்களிடையே முறையாகக் கொண்டு சென்று, அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மேம்பாட்டிற்காக, புதிய வருவாய் வட்டங்களை உருவாக்குதல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்தக் கட்டடங்கள் கட்டுதல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் மற்றும் ஜமுனாமரத்தூரில் 6 கோடியே 20 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்புகள்.
அரியலூர் மாவட்டம், அரியலூரில் 79 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்-ஆட்சியர் குடியிருப்பு.
சென்னை மாவட்டம் – கிண்டியில், 1 கோடியே 75 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சென்னை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் என மொத்தம் 8 கோடியே 75 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய்த் துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறையில், நில அளவை குறியீடு செய்தல், நில ஆவணங்களை பராமரித்தல், நில உரிமை மற்றும் பின்னர் அதில் ஏற்படும் மாற்றங்களை உரிய பதிவேடுகளில் பதிவு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்துறையின் பணிகள் தொய்வின்றி செம்மையாக நடைபெறும் வகையில், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரகத்தில் காலியாகவுள்ள நிலஅளவர், வரைவாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் 8 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 4 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் முனைவர் அதுல்யமிஸ்ரா, வருவாய் நிருவாக ஆணையர், முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் டாக்டர் இரா.செல்வராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.