தற்போதைய செய்திகள்

சென்னை மாநகராட்சி மூலம் 1.5 கோடி முகக் கவசங்கள் விநியோகம் – முதலமைச்சர் தகவல்

சென்னை

சென்னை மாநகராட்சி மூலம் 7 லட்சம் நபர்களுக்கு கபசுரக் குடிநீர் பொட்டலங்கள், 1.5 கோடி முகக் கவசங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருநகர சென்னை மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது:-

ஏழை, எளிய மக்கள் முகக்கவசம் அணியாமல் உள்ளவர்களுக்கு, முகக் கவசங்கள் வழங்குவதற்காக 1.5 கோடி முகக்கவசங்கள் வாங்கி, இப்பகுதிகளில் நபர் ஒருவருக்கு இரண்டு முகக் கவசங்கள் சென்னை மாநகராட்சி மூலம் வாங்கப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 7 லட்சம் நபர்களுக்கு கபசுரக் குடிநீர் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்கட்டுப்பாட்டு அறையில் 21 மருத்துவர்களும், 65 ஆற்றுப்படுத்துனர்களும் பொது மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தல், நோய்த் தொற்று உள்ளவர்களை பின்பற்றி கண்காணித்தல், தனிமைப்படுத்தப் பட்டவர்களை கண்காணித்தல், உளவியல் ஆலோசனை வழங்குதல், சேவை தேவைப்படுபவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலமாக சேவை வழங்குதல், புள்ளி விவரம் சேகரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து விமானம் மற்றும் ரயில்கள் மூலம் சென்னை வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் தனிமைப்படுத்தும் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன், சத்தான உணவும் வழங்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பொது மக்கள் அதிகம் வசிக்கின்ற சென்னை மாநகரப் பகுதிகளில், காய்கறி சந்தைகள், இறைச்சி, மீன், மளிகைக் பொருட்கள், ரேஷன் கடைகள் மற்றும் வங்கிகளுக்குச் செல்கின்ற பொழுது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்,

சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் கை, கால்களை சோப்பு பயன்படுத்தி சுத்தமாகக் கழுவ வேண்டும். வீட்டைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டின் கழிப்பறைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இவற்றையெல்லாம் கடைபிடித்தால் நோய்ப் பரவலைத் தடுக்க முடியும். இவைகள் தான் மிக முக்கியமான மருந்து. இந்த வழிமுறைகளைப் முழுமையாக, சரியான முறையில் பின்பற்றிய காரணத்தால் தான் இந்த நோய்த் தொற்றினால் கடுமையான பாதிப்பிற்குள்ளான வளர்ந்த நாடுகள், அந்த பாதிப்பிலிருந்து மீண்டு, இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனையே நாமும் கடைபிடித்தால் இயல்பு நிலைக்கு வந்து விடலாம்.

இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.