தற்போதைய செய்திகள்

கொரோனா தொற்றை தடுப்பதில் சவாலாக இருக்கும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தல்

மதுரை

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதில் சவாலாக இருக்கும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தினார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ரூ.5.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உலகெங்கும் இதுவரை வரலாறு காணாத வகையிலே ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி ஏறத்தாழ 1 கோடியே 30 லட்சம் மக்களுக்கு மேலே கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டு, அன்னை தமிழகத்தில் முதலமைச்சர் சவாலை எதிர்கொண்டு சீரிய நடவடிக்கையின் காரணமாக நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தீவிரமான நடவடிக்கையின் காரணமாக இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துகின்ற நடவடிக்கைகளும், கவனக்குறைவாக விழிப்புணர்வு குறைவாக நோய்த்தொற்று ஏற்பட்டுவிட்டால் மருந்தோ, தடுப்பூசியோ இல்லாத இந்த நேரத்தில் உயர்சிகிச்சையின் மூலம் அவர்களை குணப்படுத்துகின்ற நடவடிக்கைகளிலும் முன்மாதிரியாக முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.

இன்றைக்கு இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஜீரோ என்ற நிலையை இலக்காக கொண்டு மருத்துவர்களும், செவிலியர்களும் முதலமைச்சரின் எண்ணங்களை செயல்படுத்தி பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறார்கள். குணமடைந்து இல்லம் செல்பவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 65 சதவீதம் என்பது நமக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையில் உள்ளது. முதலமைச்சர் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று தேவையான நடவடிக்கைகளை எடுத்து ஆய்வு செய்கிறார். கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் 14.07.2020 இரவு வரை மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினர்.

முழு ஊரடங்கு உத்தரவில் எவ்வாறு பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் முழு ஒத்துழைப்பு வழங்கினார்களோ அதேபோல தளர்வுடன் கூடிய ஊரடங்கிலும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகள் பொருளாதார நடவடிக்கைகளுக்கான அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்பத்தில் 100 சதவிகிதம் அனுமதி பணியாளர்களுக்கு கொடுத்திருந்தாலும் வீட்டிலிருந்து பணி செய்ய தயார்படுத்தி கொள்கிறார்கள்.

அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டுமே அவர்கள் அலுவலகத்திற்கு வருகிறார்கள். அதேபோல் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளின்படி அனைத்து இடங்களிலும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்க தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளை கிருமிநாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து, அடிக்கடி சானிடைசர் கொண்டு கைகளை கழுவவேண்டும்.

இவைகளை மாவட்டம் நிர்வாகம், மாநகராட்சி, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை கண்காணித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவலை கொண்டு சேர்ப்பதில் காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது. நகர் பகுதிக்கு அடுத்தபடியான கிராமப் பகுதியில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, நடமாடும் மருத்துவக்குழுக்கள் மக்களை நேரிலே சந்தித்து பரிசோதனை செய்கிறது. அனைத்து அலுவலர்களும் இரவு பகல் பாராமல் பணியாற்றி கொண்டிருந்தாலும் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளதற்கு காரணம் ஆரம்ப நிலையிலே நோய்த்தொற்றை கண்டறிந்து குணப்படுத்துவதற்காக அதிகமான பரிசோதனை செய்யப்படுவதால் தான்.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து மதுரையில் தான் அதிகமாக பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று மட்டும் 5100 பேருக்கும், நேற்று முன்தினம் 4200 பேருக்கும் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது நமது மாவட்டத்திலும், பிற மாவட்டங்களிலும் எடுக்கப்படும் மாதிரிகளில் 10 சதவிகிதம் தான் நோய்த்தொற்று உறுதி செய்யப்படுகிறது. மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் நமக்கு சவாலாக இருக்கக்கூடிய இடங்கள். அந்த இடங்களில் எல்லாம் நாம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

தொழிற்சாலைகளில் 100 சதவிகிதம் பணியாளர்கள் பணியாற்றலாம். அங்கே நெறிமுறைகளையும், விதிமுறைகளையும் கடைபிடிக்கிறார்களா என்பதை ஆய்வு செய்வதற்கு பறக்கும்படையில் வேளாண்மைதுறை, தொழில்துறை, சிறு,குறுத் தொழில்துறை, ஈடுபட்டிருக்கிறார்கள். தேவைப்பட்டால் வருவாய்த்துறை, காவல்துறை ஆகியோர் இணைந்து பணிகளை மேற்கொள்வார்கள்.

தொழில்சாலைகளிலும், தொழிலாளர்களிடமும் பறக்கும் படையினர் தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வது, சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து, அடிக்கடி சானிடைசர் கொண்டு கைகளை கழுவுவது போன்ற நடைமுறைகளை கனிவோடு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்படுகிறார்கள். உள்நோக்கத்தோடு செயல்படும் தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யலாம்.

31.07.2020 வரை பொது போக்குவரத்திற்கு அனுமதி கிடையாது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த அனுமதியும் கிடையாது. ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும். கண்டறிகின்ற நோயாளிகளுக்கு மாநகராட்சி, மருத்துவர்கள் விதிக்கின்ற விதிகளின்படி அவர்களுக்கு தனி அறை, கழிப்பறை, உதவியாளர் என வசதிகள் இருந்து அவர்கள் விரும்பினால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஏறத்தாழ 1100க்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி குணமடைந்துள்ளது நமக்கு நம்பிக்கை தருகின்றது. டெலிமெடிசன், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி ஆகியவை நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டதற்கு குணமடைந்தவர்கள் நன்றி தெரிவிக்கிறார்கள்.

மிதமாக நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெண்டிலேட்டர், ஆக்ஸிஜன் ஆகிய வசதியோடு 21 கோவிட் கேர் சென்டர்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வடபழஞ்சி தகவல்தொழில்நுட்ப பூங்காவில் 3 தளங்களில் 1000 படுக்கை வசதிகளோடு கோவிட் கேர் சென்டர் தயார் செய்யப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

கடந்த 4 மாதங்களாக 6 ஊரடங்கின்போது சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும் மற்றும் அனைத்து அலுவலர்களும் சிறப்பாக செயல்பட்டனர். பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தோடு ஒத்துழைத்தால் நோய்த் தொற்றிலிருந்து குணமாக முடியும். நோய்த்தொற்றை முற்றிலும் தவிர்க்க விழிப்புணர்வோடு பாதுகாப்போடு இருக்கவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மதுரை மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன், கூடுதல் ஆட்சியர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) பிரியங்கா பங்கஜம், சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் (சோழவந்தான்), எஸ்.எஸ்.சரவணன்(மதுரை தெற்கு), மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) இராஜசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.