சிறப்பு செய்திகள்

விளம்பரத்திற்காக அறிக்கை வெளியிடுகிறார் ஸ்டாலின் – ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதிலடி

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில்  பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகையில், சென்னை மாநகரில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்பு முதலமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

எதிர்க்கட்சி தலைவர் ஒரு குற்றச்சாட்டை சொன்னார். அந்த குற்றச்சாட்டில் சில விளக்கங்களை தெரிவிக்க விரும்புகின்றேன். பத்திரிகையிலே இன்றைக்கு வந்த செய்தி. முதலமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது, சில கருத்துக்களை தெரிவித்திருக்கின்றார் என்று சொல்லி, 9,14,000 பிசிஆர் கிட் இருப்பதாகவும், அதில் 4.66 லட்சம் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், மீதம் 4.47 லட்சம் கருவிகள் இருக்க வேண்டுமென்றும், ஆனால் முதல்வர் 1.76 லட்சம் தான் கையிருப்பு உள்ளதாக சொல்லியிருக்கின்றார்.

மீதி எங்கே என்று கேட்டுள்ளார். 4.66 லட்சம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1.76 லட்சம் கிட் ஆபீசில் வைத்திருக்கிறார்கள். மற்றவைகளெல்லாம் கிட்டத்தட்ட 2.71 லட்சம் பிசிஆர் கிட் 43 பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்படி அங்கே பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைத்தால் தான், அந்த கருவியை பயன்படுத்தி பரிசோதனை செய்ய முடியும். ஆகவே, வேண்மென்றே திட்டமிட்டு, ஒரு தவறான செய்தியை பரப்பி இருக்கிறார்.

அதில் குறிப்பிட்டு சொல்கிறார், ஊரடங்கு காலத்தில் தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற விளம்பரத்திற்காக இந்த ஊரடங்கை பயன்படுத்துகிறார் முதலமைச்சர் என்று சொல்யிருக்கிறார். நான் ஏதோ முன்னிலைப்படுத்தி விளம்பரப்படுத்தி கொண்டேனா? அவர் தான், விளம்பரத்திற்காக இந்த அறிக்கையை வெளியிட்டியிருக்கிறார் என்று நான் கூறுகிறேன்.

அதுமட்டுமல்லாமல், இன்றைக்கு இதுவரைக்கும் 15,45,700 பிசிஆர் கிட் ஆணை வழங்கப்பட்டிருக்கின்றன. இதுவரை பெறப்பட்டது 11,51,700. நன்கொடையாக பெறப்பட்ட பிசிஆர் கிட் 53,516. மத்திய அரசு வழங்கிய 50,000 பிசிஆர் கிட். மொத்தம் தமிழக அரசால் பெறப்பட்ட பிசிஆர் கிட் 12,55,216. தற்போது நம்முடைய டிஎன்எம்எஸ்சி-ல் இருப்பு இருப்பது 4,59,800. மருத்துவமனைகளுக்கு பரிசோதனை செய்வதற்காக வழங்கப்பட்டது 7,95,416.

இதில் பரிசோதனை செய்யப்பட்ட கிட்டுகளின் எண்ணிக்கை 5,03,339. தற்போது ஆங்காங்கே இருக்கின்ற பரிசோதனை மையங்களில் இருப்பாக இருக்கின்ற பிசிஆர் கிட் எண்ணிக்கை 2,92,077 இருக்கிறது. இதுதான் உண்மை நிலவரம். இதை யாரும் மறைக்கவும் இல்லை, இதில் எந்தவித முறைகேட்டிற்கும் வழியும் இல்லை என்பதை தெளிவுப்பட தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி – தமிழகத்தின் சுகாதாரத்துறை கட்டமைப்பு சிறப்பாக இருப்பதாக கேரளா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இதைப் பற்றிய உங்களுடைய பார்வை என்ன?பதில் – நன்றாக இருக்கிறது என்று அவரே கூறியிருக்கிறார். பாராட்டுக்குரியது தானே. தமிழகத்தை பொறுத்தவரைக்கும், இன்றைக்கு அதிகமான எண்ணிக்கையில் டெஸ்ட் செய்கிறோம். இது கண்ணுக்கு தெரியாத வைரஸ். ஒருவரிடத்திலிருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவக்கூடியது. ஏழை மக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதி இது.

அப்படிப்பட்ட மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் அதிக அளவில் நாங்கள் டெஸ்ட் செய்கிறோம். அதிக அளவிலே டெஸ்ட் செய்கின்ற காரணத்தினால் தான் இந்த நோய் பரவலை கண்டறிய முடிகிறது. இப்படி கண்டறிந்தால் தான் குணப்படுத்தி அனுப்ப முடியும். நோய் பரவலை தடுக்க முடியும். இதைத்தான் எங்களுடைய கடமையாக இருந்து செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மற்ற மாநிலத்தில் எப்படி இருக்கிறார்கள் என்பதை அங்கே போய் பார்த்தால் தான் தெரியும். ஏன் என்றால், அவர்கள் குறைவாக டெஸ்ட் எடுக்கின்ற காரணத்தினால் தான், குறைந்திருக்கிறது. இதை எதற்காக சொல்கிறேன் என்றால், மகாராஷ்டிராவில் இருந்து வருகிறார்கள். எவ்வளவு பேருக்கு தொற்று இருக்கிறது என்பதை தினந்தோறும் நம்முடைய சுகாதாரத் துறை மூலமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. பிற மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வந்தவர்களில் பரிசோதனை செய்ததில் 1,670 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

1670 பேருக்கு தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்றால் அந்த மாநிலத்தில் எப்படி பரிசோதனை செய்திருப்பார்கள் என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள். நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரைக்கும் அதிக அளவிலே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, யாருக்காவது தொற்று ஏற்பட்டிருந்தால், அது கண்டறியப்பட்டு, அவர்களை குணமடைய செய்வது தான் எங்களுடைய கடமை என்ற எண்ணத்தின் அடிப்படையிலே நாங்கள் செயலாற்றி கொண்டு இருக்கின்றோம்.

அதுமட்டுமல்ல, அர்ப்பணிப்பு உணர்வோடு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளிலிருந்து, அனைத்து பணியாளர்கள், வருவாய்த் துறை பணியாளர்கள், கூட்டுறவுத் துறை பணியாளர்கள், உள்ளாட்சித் துறை பணியாளர்கள், பிற துறை பணியாளர்கள், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றார்கள். அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

தனக்கு நோய் தொற்று ஏற்படும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஒருவர் 20 நிமிடம் தொற்று ஏற்பட்டவர்களோடு பேசிக் கொண்டிருந்தாலே, அந்த தொற்று ஏற்பட்டு விடும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். இப்படிப்பட்ட நிலைமை இருந்தால் கூட, நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் எல்லாம் நான் குறிப்பிட்ட அந்த துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள், அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு கொண்டிருக்கின்ற காரணத்தினால் தான், தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.