தற்போதைய செய்திகள்

வள்ளியூர் முருகன் கோவில் அருகே ரூ.1 கோடியில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி – ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் முருகன் கோவில் அருகே இந்துசமய அறநிலையத்துறை மூலம் புதிய திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது. ரூ. 1 கோடி மதிப்பீட்டில் 2000 சதுர அடியில் அமைய இருக்கும் இந்த நவீன திருமண மண்டபத்திற்கு ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை நேற்று அடிக்கல் நாட்டினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அதையடுத்து வள்ளியூர் முருகன் கோவிலில் தான் ஏழைக் குடும்பங்களின் திருமணங்கள் பெருமளவில் நடைபெறுகிறது.

இவ்வாறு கோவிலில் திருமணங்களை எளிய முறையில் நடத்துபவர்கள் வசதிக்கென அறநிலையத்துறை சார்பில் வள்ளியூர் முருகன் கோவிலை ஒட்டி திருமண மண்டபத்தை தமிழக அரசு கட்டித்தர வேண்டும் என்பது வள்ளியூர் சுற்று வட்டார பொதுமக்களின் நெடுநாளைய கோரிக்கை ஆகும்.

ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை தொடர்ந்து சட்டமன்றத்தில் வலியுறுத்தியதன் விளைவாக கடந்த 2017ம் ஆண்டு அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வள்ளியூர் முருகன் கோவிலில் அறநிலையத்துறை சார்பில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

இதற்கென தமிழக அரசின் சார்பில் உடனடியாக ரூ.58 லட்சம் ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டது. ஆனால் இதற்கென ஒதுக்கப்பட்ட தொகையை ரூ.1 கோடியாக உயர்த்தி அங்கு பிரமாண்டமான திருமண மண்டபம் அமைத்து தரவேண்டும் என்று இன்பதுரை எம்.எல்.ஏ தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் தமிழக அரசு இக்கோரிக்கையை ஏற்று வள்ளியூர் முருகன்கோவில் திருமணமண்டப பணிக்காக தமிழக அரசு மொத்தமாக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்து கடந்த மார்ச் மாதம் ஆணை வெளியிட்டது. இதை தொடர்ந்து டெண்டர் விடப்பட்டு மண்டப கட்டுமான பணிகளுக்கான பணி ஆணையும் வழங்கப்பட்டது.

அதன்படி வள்ளியூரில் நேற்று எளிமையாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ கலந்து கொண்டு புதிய திருமண மண்டபம் கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் பரஞ்ஜோதி, ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, நகர செயலாளர் பொன்னரசு, செயல் அலுவலர் சுபாஷினி, வெண்ணிமலை யாதவ், சண்முக பாண்டியன், எட்வர்ட் சிங், அரசு வழக்கறிஞர் கல்யாண குமார், செழியன், முருகேசன், ஈஸ்வர மூர்த்தி, கருப்பசாமி, பணகுடி ஜெகன், மற்றும் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.