தற்போதைய செய்திகள்

மின்னணு வடிவமைப்பு, உற்பத்தி துறைகள் குறித்த கருத்தரங்கு – அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்பு

சென்னை

இன்வெஸ்ட் இந்தியா நிறுவனம் நடத்திய 4 மாநில தொழில் முதலீட்டாளர்களுக்கான மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறைகள் பற்றிய காணொலி கருத்தரங்கில் அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்றார்.

கொரோனா நோய் பரவலால் உலகெங்கும் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டெழும் வகையிலும், புதிய முதலீடுகளை ஊக்குவித்திடவும், இந்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும், பல திட்டங்களை தீட்டி வருகின்றன. இந்நிலையில், இன்வெஸ்ட் இந்தியா நிறுவனம், உலகளவில் உள்ள முக்கிய தொழில் நிறுவனங்களுடன், காணொலி வழி கருத்தரங்குகள் நடத்தி, இந்தியாவில் நிலவும் தொழில் சூழல் குறித்து எடுத்துரைத்து வருகிறது.

நேற்று முன்தினம் தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், ஹரியானா மற்றும் கர்நாடகா மாநில அரசுகளின் பிரதிநிதிகளும், மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறையில் உள்ள பல்வேறு தொழில் முதலீட்டாளர்களும் கலந்து கொண்ட ஒரு காணொலி கருத்தரங்கு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில்துறை முதன்மை செயலாளர் ந.முருகானந்தம், ஃபாக்ஸ்கான் நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜோஷ் ஃபௌல்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மின்னணு உற்பத்தி துறையை மேலும் ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்துரைத்தார். மின்மிகை மாநிலமான தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் தொழில் பூங்காக்கள், புதிய தொழிற் கொள்கை, இடம்பெயர்ந்து வரவுள்ள மின்னணு வன்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகைகள் போன்றவற்றை எடுத்துரைத்தார். இந்த காணொலி கருத்தரங்கு, தமிழ்நாட்டில் நிலவி வரும் வாய்ப்புகளை, உலக முதலீட்டாளர்களுக்கு தெரியப்படுத்திடவும், அவர்களோடு சிறப்பான ஒத்துழைப்பை தொடர்ந்திடவும் நல்வாய்ப்பாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொழில்துறை முதன்மைச் செயலாளர் உரையாற்றுகையில், மின்னணு உற்பத்தித்துறையில், தமிழ்நாட்டின் வளர்ச்சியினையும், தமிழ்நாட்டில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள், ஒற்றைச்சாளர முறை மூலம் விரைவான அனுமதிகள், தொகுப்புச் சலுகைகள், போன்றவற்றை எடுத்துரைத்து, தமிழ்நாட்டில், மின்னணு துறையில் முதலீடு செய்திட முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இதைத் தொடர்ந்து உரையாற்றிய தமிழ்நாட்டில் தனது தொழில் நிறுவனத்தை மிகப் பெரிய அளவில் நிறுவியுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு அரசின் மேலான ஒத்துழைப்பால் அவரது தொழில் திட்டம் அடைந்த வெற்றியைப் பற்றியும், தமது நிறுவனத்தின் முதலீடு மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் வருங்கால விரிவாக்க திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.