தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மா உணவகம் மூலம் இம்மாதம் இறுதிவரை விலையில்லா உணவு – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தகவல்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மா உணவகங்கள் மூலம் ஜூன் மாதம் இறுதி வரை பொதுமக்களுக்கு விலையில்லாமல் உணவு வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அரசு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலையில் 2 அம்மா உணவகங்கள், ஆரணி, செய்யார், வந்தவாசி, ஆகிய பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்கள் மூலமாக நலிந்தவர்கள், ஏழைகள், உள்ளிட்டவர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும், செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் ஆகியோர் தங்களது சொந்த செலவில் 3 வேளை உணவை விலையில்லாமல் வழங்கி வந்தனர்.

கடந்த மார்ச் 26-ந்தேதி முதல் இன்று வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்கள் மூலமாக தொடர்ந்து விலையில்லாமல் உணவு வழங்கி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு திருவண்ணாமலை அம்மா உணவகத்தில் 13000 பேருக்கும். ஆரணியில் 1400 பேருக்கும், செய்யாரில் 800 பேருக்கும், வந்தவாசியில் 800 பேருக்கும் விலையில்லா உணவு வழங்கப்பட்டு வருகிறது மேலும் ஊரடங்கு ஜூன் 30ந்தேதி வரை நீடிக்கும் எனஅரசு அறிவித்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்கள் மூலமாக தொடர்ந்து ஜூன் 30ந்தேதி வரை மக்களுக்கு விலையில்லா உணவு வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.