தற்போதைய செய்திகள்

விலையில்லா உணவுக்கு ரூ.86.19 லட்சம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

கோவை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படும் அம்மா உணவகங்களில் உணவருந்தும் அனைவருக்கும் விலையில்லாமல் உணவு வழங்குவதற்கான செலவினத்தொகையான ரூ.86.19 லட்சத்தை ரொக்கமாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு வழங்கப்பட்டு வருவதற்கு இதுவரை (31.05.2020) செலவினமான ரூ.61.19 லட்சமும், ஊரடங்கு காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு வழங்குவதற்கு முன்பணமாக ரூ.25 லட்சமும், என மொத்தம் ரூ.86.19 லட்சத்தை ரொக்கமாக மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணியிடம் வழங்கினார்.

இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது:-

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்திட முதலமைச்சர் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவரும் அதேவேளையில், சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் காய்கறி உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் வழங்குதல், சாலையோரம் வசிப்போர்களுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் மூலம் அனைவருக்குமான உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகின்றது.

மேலும், ஏழை எளிய மக்களின் அட்சயபாத்திரமாக விளங்கும் அம்மா உணவகங்களில் செயல்பாட்டினை இரண்டு வேளையிலிருந்து காலை மதியம் மற்றும் இரவு என்று மூன்று வேளைகளில் உணவு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏழை எளியோர்களின் பசியாற்றும் பணியில் அம்மா உணவகம் மிகச்சிறந்த பங்காற்றி வருகின்றது. மேலும், நாளுக்கு நாள் அம்மா உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகின்றது.

அனைத்து மக்களுக்கும் உணவு வழங்கிட ஏதுவாக, சமைத்து வரும் உணவின் அளவினை உயர்த்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில், மாநகராட்சி பகுதிகளில் உள்ள 12 அம்மா உணவகங்களுக்கும், நகராட்சிகளில் உள்ள 3 அம்மா உணவகங்களுக்கும் தலா ரூ.2 லட்சம் மதிப்பில் பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியிலுள்ள அம்மா உணவகங்களில் 7,96,826 நபர்கள் ரூ.41.38 லட்சம் மதிப்பில், உணவு உண்டு பயனடைந்துள்ளனர்.

மேலும், அம்மா உணவகங்களில் உணவுடன் முட்டைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர் மாநகராட்சி அம்மா உணவகத்தில் 1,79,958 நபர்களுக்கு ரூ.7.82 லட்சம் மதிப்பில் முட்டைகள் என மொத்தம் ரூ.49.21இலட்சம் மதிப்பில் உணவு மற்றும் முட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சியில் உள்ள அம்மா உணவகத்தில் 31.05.2020 முதல் காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளில் 64014 நபர்கள் ரூ.3.67 லட்சம் மதிப்பிலும், மேட்டுப்பாளையத்திலுள்ள அம்மா உணவகத்தில் 37,300 நபர்கள் ரூ.2.62 லட்சம் மதிப்பிலும், வால்பாறையிலுள்ள அம்மா உணவகத்தில் 85,094 நபர்களுக்கு ரூ.5.68 லட்சம் மதிப்பிலும், என மொத்தம் 1,86,408 நபர்கள் ரூ.11.98 லட்சம் மதிப்பில் மூன்று வேளையும் உணவு உண்டு பயனடைந்துள்ளனர்.

இதற்கான மொத்த செலவினத்தொகை ரூ.61.19 லட்சத்தையும், மேலும், ஊரடங்கு காலம் முடியும் வரை கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அம்மா உணவகங்களில் விலையில்லாமால் உணவு வழங்குதற்கான செலவினத்திற்கு முன்பணமாக தோராயமாக ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.86.19 லட்சம் ரொக்கமாக கோயம்புத்தூர் மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படும் அம்மா உணவகங்களில் உணவருந்தும் அனைவருக்கும், ஊரடங்கு காலம் முடியும் வரை உணவிற்கான கட்டணம் வசூலிக்கப்படாது எனவும், அதற்கான செலவினத் தொகையினை, கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுகுட்டி, அம்மன் கே.அர்ச்சுணன், எட்டிமடை எ.சண்முகம், கஸ்தூரிவாசு, வி.பி.கந்தசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.