சிறப்பு செய்திகள்

இந்தியாவிலேயே அதிகமான வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம்

சென்னை

அப்பட்டமான பொய், வடி கட்டிய பொய்யை சொல்கிறார் ஸ்டாலின் என்றும் இந்தியாவிலேயே அதிகமான வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்றுபெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது:-

எதிர்க்கட்சித் தலைவர் ஒரு குற்றச்சாட்டை பேசியிருக்கின்றார். பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. நான் மாவட்ட ஆட்சியாளர்களுடன் 29.5.2020 அன்று நடத்திய காணொலிக்காட்சி கூட்டத்தில் பேசுகின்ற பொழுது, சில புள்ளி விவரங்களை சொன்னேன். அப்போது 9.1 லட்சம் பிசிஆர் வாங்கப்பட்டது. அதில் 4.66 லட்சம் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மீதி 1.7 லட்சம் அரசாங்கத்திடம் இருப்பதாக நான் குறிப்பிட்டேன். ஆனால், அதை அவர்கள் எடுத்துக் கொண்டு, இருப்பு 4.47 லட்சம் இருக்க வேண்டும்,

ஆனால் 2.71 லட்சம் பிசிஆர் கிட் எங்கே போயிற்று என்று கேட்கின்றார். எங்களைப் பொறுத்தவரைக்கும் சரியான முறையில் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறோம். மொத்தம் 9.1 லட்சம் பிசிஆர் கிட் வாங்கப்பட்டது. அதில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட கருவி 4.66 லட்சம், எஞ்சியிருப்பது 1.7 லட்சம் கையிருப்பு. மீதம், 43 பரிசோதனை நிலையங்களுக்கு பரிசோதனை செய்வதற்காக 2.71 லட்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் சரியான முறையில் தான் சொல்லியிருக்கிறோம். அதை அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், மீதி எங்கே போயிற்று, முதலமைச்சர் விளம்பரம் தேடுவதற்காக இப்படிப்பட்ட அறிவிப்பை கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

நீங்கள் தான் இதனால் விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறீர்கள், அரசாங்கமும் அல்ல, நானும் அல்ல. ஆகவே, நம்முடைய மருத்துவர்கள் கொடுக்கின்ற அந்தக் கணக்கின்படிதான் நாங்கள் தெரிவிக்கின்றோம். இதுவரைக்கும், கொள்முதல் செய்ய ஆணையிடப்பட்ட பிசிஆர் கிட் 15,45,700. இதுவரை வரப்பெற்றவை 11,51,700, நன்கொடை மூலமாக பெறப்பட்டது 53,516, மத்திய அரசு வழங்கியது 50,000. எல்லாவற்றையும் சேர்த்து இதுவரை பெறப்பட்டவை 12,55,216. அதோடு இதுவரைக்கும் 7,95,416 நாம் கொடுத்திருக்கிறோம். அதில் 5,03,331 பரிசோதனைகள் செய்திருக்கிறோம். மீதி 2,92,077 இன்றைக்கு ஆங்காங்கே அந்தந்த முகாமில் இருக்கிறது. இன்றைக்கு நம்மிடம் ,இருப்பு 4,51,800 இருக்கிறது. இதுதான் தற்போதைய நிலை என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இன்றைக்கு வென்டிலேட்டர் பற்றி இங்கே குறிப்பிட்டார்கள். நமக்குத் தேவையான வென்டிலேட்டர்கள் இருக்கின்றன. இன்றைக்கு 2,741 வென்டிலேட்டர்கள் அரசிடமே இருக்கிறது, தனியாரிடத்தில் 630 இருக்கிறது. ஆகவே, 3,371 வென்டிலேட்டர்கள் நம்மிடத்தில் இருக்கின்றன. தனியார் மருத்துவமனையில் 630 இருக்கின்றது, நாம் புதிதாக 620 வாங்கியிருக்கின்றோம். எல்லாவற்றையும் சேர்த்து 3,371 வென்டிலேட்டர்கள் அரசிடம் இருக்கின்றது தனியார் மருத்துவமனை உட்பட. ஆகையால் அச்சப்படத் தேவையில்லை.

வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. வெறும் 5 சதவீதம் பேருக்குத் தான் வென்டிலேட்டர் பயன்படுத்துகிறோம். மீதியுள்ளவர்களுக்கு வென்டிலேட்டர் தேவையில்லை. வென்டிலேட்டர் இல்லாததால் தான், குணமடையச் செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார். இது அப்பட்டமான பொய், வடிகட்டிய பொய். இந்தியாவிலேயே அதிகமான வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.