தற்போதைய செய்திகள்

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை-கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ உறுதி

கிருஷ்ணகிரி

வேப்பனஹள்ளி அருகே காட்டு யானைகள் அட்டகாசத்தால் வாழை, தக்காளி பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ உறுதி அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட சிகரமாகனப்பள்ளி, தோட்டகனவாய், கொங்கனப்பள்ளி கிராமங்கள் தமிழக எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதி. இங்குள்ள விளை நிலங்களில் வாழை, தக்காளி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில் காட்டு யானை கூட்டம் இந்த விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. இதனால் வாழைகள் மற்றும் தக்காளி செடிகள் சேதமடைந்தன. மேலும் அப்பகுதியில் தென்னை மரங்கள், பப்பாளி மரங்களையும் வேரோடு சாய்த்த காட்டு யானை கூட்டம் தண்ணீர் வரும் குழாய்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு வனப்பகுதிகள் சென்று விட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கழக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி, சிகரமாகனப்பள்ளி, தோட்டகனவாய், கொங்கனப்பள்ளி கிராமங்களுக்கு நேரில் சென்று காட்டு யானைகள் அட்டகாசத்தில் சேதமடைந்த வாழை, தக்காளி உள்ளிட்ட பயிர்களையும், மரங்களையும் பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்த அவர் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த நிகழ்வின் போது வேப்பனப்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ராமமூர்த்தி, மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சைலேஷ் கிருஷ்ணன், ராகேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.