காஞ்சிபுரம்

ரூ.184.98 கோடி மதிப்பீட்டில் சாலை திறப்பு – முதலமைச்சருக்கு செங்கல்பட்டு மாவட்ட மக்கள் நன்றி

காஞ்சிபுரம்

சட்ராஸ் முதல் செங்கல்பட்டு வரையிலான சாலை மற்றும் காஞ்சிபுரம் முதல் வந்தவாசி வரையிலான 184.98 கோடி ரூபாய் மதிப்பிலான சாலையை முதலமைச்சர் காணொலி காட்சி முலம் திறந்து வைத்ததற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் சட்ராஸ் முதல் செங்கல்பட்டு வரையிலான சாலை 26.8 கிலோ மீட்டர் சாலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் முதல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வரையிலான சாலை ஆகியவை உலக வங்கி நிதியுடன் மேம்படுத்தும் பணி நடைபெற்றது. 20 மீட்டர் அகலத்தில் 48.482 கிலோ மீட்டர் சாலையில் சட்ராஸ் முதல் செங்கல்பட்டு வரையிலான சாலையில் குன்னத்தூர், நத்தம்கரியச்சேரி, ஈகை, கீரபாக்கம் நென்மேலி உள்ளிட்ட பல பகுதிகளில் 22 பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் முதல் வந்தவாசி வரையிலான சாலையில் கூழமந்தல் பெருநகர், தென்னாங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து நிறுத்தங்களும், ஆங்காங்கே பெரிய பாலம், குழாய் பாலம், பெட்டி பாலம் உள்ளிட்டவை கட்டும் பணிகளும் நிறைவடைந்ததையடுத்து அச்சாலைகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு அடுத்த நெம்மேலி பகுதியிலிருந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ஜான்லூயிஸ் பங்கேற்றார். அப்போது மாவட்டக் கழகச் செயலாளரும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவருமான திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், முன்னாள் எம்.பி. மரகதம்குமரவேல், எஸ்.பி. கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். பாதுகாப்பாகவும் விரைவாகவும் பயணம் மேற்கொள்ளும் வகையில் சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் கழகத்தினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.