சிறப்பு செய்திகள்

தேனி அரசு சட்டக்கல்லூரிக்கு ரூ. 89.01 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி – துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

தேனி

ரூ.89.01 கோடி மதிப்பீட்டில் தேனி அரசு சட்டக் கல்லூரி மற்றும் மாணவ, மாணவிகளின் விடுதி கட்டடப்பணிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம், தேனி வட்டத்திற்குட்பட்ட தப்புக்குண்டு கிராமத்தில் நேற்று சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் முன்னிலையில் தேனி அரசு சட்டக்கல்லூரி மற்றும் மாணவ, மாணவியர்களின் விடுதி கட்டடங்களுக்கான கட்டுமானப்பணிகளை துவக்கி வைத்தார்.

தமிழகத்தின் எதிர்கால தூண்களாக விளங்கி வரும் மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து பயன்பெறச் செய்து வருகிறது. மேலும் மாணவ, மாணவியர்களுக்கென கற்றலுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவது மட்டுமன்றி, அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும்; அரசால் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஆண்டுதோறும் சட்டக்கல்வி பயிலுவதற்கான விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கருத்தில் கொண்டு பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய குடும்பங்களை சார்ந்த மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சர் கடந்த 10.07.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் 110–ன் கீழ், குறைந்த செலவில் சட்டக்கல்வியினை வழங்கிட புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் துவங்கப்படும் என அறிவித்தார்.

மேற்கண்ட அறிவிப்பிற்கிணங்க சேலம், நாமக்கல் மற்றும் தேனி ஆகிய 3 இடங்களில் 2019-–2020ம் கல்வியாண்டு முதல் 3 ஆண்டு சட்டப்படிப்பு மற்றும் 5 ஆண்டு சட்டப்படிப்பில் முதலாம் ஆண்டில் 80 மாணவர்களுடன், தலா 1 அரசு சட்டக்கல்லூரி துவங்கிடவும், சேலம், நாமக்கல் மற்றும் தேனி ஆகிய இடங்களில் புதிதாக அரசு சட்டக்கல்லூரிகள் துவங்குவதற்கான ஆரம்ப கட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசால் ஆணையிடப்பட்டது.

அதன்படி, தேனி மாவட்டம், திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ சந்திரகுப்தா மௌரியா என்ற தனியார் பள்ளிக்கட்டிடத்தில் கடந்த (29.08.2019) அன்று சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தால் துவக்கி வைக்கபட்டு, தற்சமயம் இக்கல்லூரி மிகச்சிறப்பாக இயங்கி கொண்டிருக்கிறது.

மேலும் 2019-20 கல்வி ஆண்டில் துவங்கிய இக்கல்லூரியில் தற்பொழுது 3 ஆண்டு பிரிவில் 80 மாணவ மாணவியரும், 5 ஆண்டு பிரிவில் 80 பேரும் தேனி மாவட்டம் மட்டுமல்லாது இதர மாவட்டங்களிலிருந்தும் படித்து வருகிறார்கள். இச்சட்டக்கல்லூரி தமிழ்நாட்டில் 14-வது சட்டக்கல்லூரி ஆகும்.

தேனி அரசு சட்டக்கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்டும் வகையில் தேனி வட்டம், தப்புகுண்டு வருவாய் கிராமத்தில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில கல்லூரி வளாகமும் மற்றும் 2 ஏக்கர் பரப்பளவில் மாணவர் விடுதியும் என மொத்தம் 14 ஏக்கர் பரப்பளவில், ரூ. 89.01 கோடி மதிப்பீட்டில் நிரந்தர கட்டடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தும் பொருட்டு, முதலமைச்சர் கடந்த 6.3.2020 அன்று காணொலிக் காட்சியின் மூலம் தேனி அரசு சட்டக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத்தொடர்ந்து நேற்று தேனி வட்டம், தப்புகுண்டு வருவாய் கிராமத்தில் புதிதாக கட்டப்படவுள்ள தேனி அரசு சட்டக்கல்லூரி மற்றும் மாணவ, மாணவிகளுக்கான விடுதிக்கட்டடங்கள் ஆகியவைகளின் கட்டுமானப் பணிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

புதிதாக கட்டப்படவுள்ள தேனி அரசு சட்டக்கல்லூரியில் தரை மற்றும் இரு தளங்கள், 26 வகுப்பறைகள், சுமார் 400 மாணவர்கள் பங்குபெறும் வகையில் கருத்தரங்கக்கூடம், காணொலிக் காட்சி அறை, சொற்பொழிவு அறை, மாணவ,மாணவியர்களுக்கென தனித்தனி ஓய்வறைகள், கணிணி ஆய்வகம், உள்விளையாட்டரங்கம், மாணாக்கர்கள் சர்வதேச மாதிரி நீதிமன்றப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கேற்ப சர்வதேச தரத்தில் மாதிரி நீதிமன்ற அரங்கம், நவீன தரத்தில் கல்லூரி அலுவலகம், நிர்வாகத் தொகுதிக் கட்டடங்கள், அதிவேக இணைய வசதிகளுடன் கூடிய கம்பியில்லா மண்டலம் அடங்கிய நூலக கட்டடங்கள், நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் தேனி அரசு சட்டக்கல்லூரி கட்டப்படவுள்ளது.