தற்போதைய செய்திகள்

ரேசனில் யார் தவறு செய்தாலும் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை – அமைச்சர் ஆர்.காமராஜ் எச்ச்சரிக்கை

திருவாரூர்

ரேசன் கடைகளில் யார் தவறு செய்தாலும் தயவுதாட்சண்யமின்றி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆர். காமராஜ் எச்சரித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்குட்பட்ட தலையூர், பில்லூர், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது அவர், விதவைகள் உதவி தொகை , முதியோர் உதவித்தொகை மற்றும் பொதுமக்களின் அனைத்து கோரிக்கை மனுக்களுக்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து மாங்குடியில் உள்ள ரேசன் கடையில் ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.காமராஜ், ஜூன் மாதத்திற்கான அரிசி , பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட விலையில்லா பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் ஆர்.காமராஜ், ஜூன் மாதத்திற்கான விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற ரேசன் கடைகளில் யார் தவறு செய்தாலும், அரசை பொறுத்தவரையில் தயவுதாட்சண்யமின்றி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இலவச மின்சாரம் தொடர வேண்டும் என்பதில் அழுத்தமான கருத்துக்கள் கொண்ட இயக்கம் கழகம். அதில் மாற்றுக்கருத்து கிடையாது என்றார்.